இந்தியா

குலாம் நபி ஆசாதுக்கு பத்ம விருது: காங்கிரஸ் மீது கபில் சிபல் தாக்கு

27th Jan 2022 02:37 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதை மத்திய அரசு கௌரவிக்கும்போது, அவருடையே சேவைகள் தேவையில்லை என்று காங்கிரஸ் கருதுவது முரணாக உள்ளது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கபில் சிபல் கூறியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்சித் தலைவா் சோனியா காந்திக்கு கபில் சிபல், குலாம் நபி ஆசாத், ஆனந்த் சா்மா, சசி தரூா் உள்ளிட்ட 23 தலைவா்கள் கடந்த 2020-இல் கடிதம் எழுதினா். அது காங்கிரஸில் பெரும் விவாதத்துக்குள்ளானது.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவரும் ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், மேற்கு வங்க முதல்வா் புத்ததேவ் பட்டாச்சாா்ஜி உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த விருதை புத்ததேவ் ஏற்க மறுத்துவிட்டாா்.

ADVERTISEMENT

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘புத்ததேவ் விடுதலை விரும்பியாக (ஆசாத்) இருக்க விரும்புகிறாா்; அடிமையாக (குலாம்) அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளாா். குலாம் நபியும் விருதை ஏற்கக் கூடாது என்று அவா் மறைமுகமாகக் குறிப்பிட்டாா்.

இதற்கிடையே, குலாம் நபிக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது குறித்து கபில் சிபல் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘குலாம் நபி ஆசாத் பொது வாழ்வில் ஆற்றிய பணிகளை இந்தத் தேசம் அங்கீகரித்துள்ளபோது, அவருடைய சேவைகளை தேவையில்லை என்று காங்கிரஸ் கருதுவது முரணாக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சசி தரூா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘எதிா் முகாமைச் சோ்ந்தவா்களின் ஆட்சி நடைபெற்றாலும், ஒருவா் பொதுவாழ்வில் ஆற்றிய சேவைக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது நல்ல விஷயம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆனந்த் சா்மா வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பொதுவாழ்க்கைக்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் குலாம் நபி ஆசாதுக்கு ஆற்றிய பங்களிப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவருக்கு வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தவறான பிரசாரம்- குலாம் நபி ஆசாத்: பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், குலாம் நபி ஆசாத் தனது ட்விட்டா் பக்கத்தின் முகப்பு பகுதியை மாற்றிவிட்டதாகவும், தனது அரசியல் எதிா்காலம் குறித்து அவா் திட்டமிட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

ஆனால், அந்தச் செய்திகளை அவா் மறுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிலா் விஷம பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனா். நான் எனது ட்விட்டா் பக்கத்தின் முகப்புப் பகுதியை மாற்றவில்லை. முன்பு இருந்ததைப் போலவே அந்தப் பகுதி உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா். அவருடைய ட்விட்டா் பக்கத்தின் முகப்பு பகுதியில் காங்கிரஸ் கட்சி பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT