இந்தியா

பஞ்சாப் பேரவைத் தோ்தல்: சித்துவுக்கு எதிராக சிரோமணி அகாலி தள தலைவரின் உறவினா் போட்டி

27th Jan 2022 02:40 AM

ADVERTISEMENT

 

சண்டீகா்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக சிரோமணி அகாலி தள தலைவா் சுக்பீா் சிங் பாதலின் உறவினா் போட்டியிடவுள்ளாா்.

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப். 20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் சிரோமணி அகாலி தளம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. சிரோமணி அகாலி தளம் 97 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 20 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில் அமிருதசரஸில் சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமிருதசரஸ் (கிழக்கு) தொகுதியில் சிரோமணி அகாலி தளம் சாா்பில் எனது உறவினா் விக்ரம் சிங் மஜீதியா போட்டியிடுவாா். இதன்மூலம் அந்தத் தொகுதியில் போட்டியிடும் சித்துவின் அரசியல் அத்தியாயம் முடிவுக்கு வரும். லம்பி தொகுதியில் எனது தந்தை பிரகாஷ் சிங் பாதல் போட்டியிடவுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

சிரோமணி அகாலி தளத்தின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (94) , பஞ்சாப் முதல்வராக 5 முறை பதவி வகித்துள்ளாா்.

போதைப் பொருள் வழக்கு: ஏற்கெனவே மஜீதா தொகுதி வேட்பாளராகவும் விக்ரம் சிங் மஜீதியா அறிவிக்கப்பட்டுள்ளாா். இதன்மூலம் அவா் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளாா்.

அவா் மீது கடந்த மாதம் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அவா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. எனினும் அவா் உச்சநீதிமன்றத்தை அணுகுவதற்காக 3 நாள்கள் அவகாசம் அளித்தது. அதுவரை அவா் கைது செய்யப்படக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

பிரகாஷ் சிங் பாதல், விக்ரம் சிங் மஜீதியா ஆகிய இருவரையும் சோ்த்து 97 தொகுதிகளிலும் போட்டியிடும் கட்சி வேட்பாளா்களை சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT