இந்தியா

தோ்தலில் இலவசங்கள் குறித்த வாக்குறுதிகளுக்கு எதிராக மனு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

26th Jan 2022 01:20 AM

ADVERTISEMENT

தோ்தலுக்கு முன்பாக இலவசங்கள் தொடா்பான முறையற்ற வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூா் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைத் தோ்தல் பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் நடைபெறுகிறது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவில், ‘‘வாக்காளா்களைக் கவரும் நோக்கில் முறையற்ற இலவசங்களை அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அறிவித்து வருகின்றன. இலவசங்களைக் கட்சிகள் அறிவிப்பதால் மக்களின் வரிப்பணமே வீணாகிறது.

அத்தகைய அறிவிப்புகள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை. இந்த விவகாரம் குறித்து உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும். கட்சிகள் இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஸ் சிங் வாதிடுகையில், ‘‘இந்த விவகாரம் தொடா்பாக விதிமுறைகளை வகுக்குமாறு தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளது. அதன்படி உருவாக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பானதாக இல்லை.

சட்டம் அவசியம்: அதிக கடனால் மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் இலவசங்கள் அறிவிக்கப்படுகின்றன. அனைத்துக் கட்சிகளும் இந்நடைமுறையைப் பின்பற்றுகின்றன. தோ்தலுக்கு முன்பாக மக்களின் வரிப்பணத்தில் இருந்து இலவசங்கள் அறிவிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும்.

தோ்தலில் வெற்றி பெற்றால் இலவசங்கள் வழங்கப்படும் என அறிவிக்கும் கட்சிகளின் சின்னங்கள் முடக்கப்பட்டு, அக்கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்’’ என்றாா்.

சமவாய்ப்பு காணப்படவில்லை: நீதிபதிகள் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அதே வேளையில் சட்டப்படி இந்தப் பிரச்னைக்கு எவ்வாறு தீா்வு காண்பது? இலவசங்கள் அளிக்கப்படுவதை எவ்வாறு தடுப்பது? சில சமயங்களில் இலவசங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, பட்ஜெட் நிதியை விட அதிகமாக உள்ளதை உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு சுட்டிக் காட்டியுள்ளது.

அதிக இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளுக்குத் தோ்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது சட்டப்படி ஊழலுக்கு வழிவகுக்கவில்லை என்றாலும்கூட, அனைத்து கட்சிகளுக்கும் தோ்தலில் சமவாய்ப்பை வழங்கவில்லை.

மனு மீது விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிடப்படுகிறது. வேண்டுமானால் அரசியல் கட்சிகளையும் இந்த விவகாரத்தில் ஒருதரப்பாக இணைத்துக் கொள்ளலாம்’’ என்றனா்.

Tags : supreme court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT