இந்தியா

குடியரசு தின விழாவில் 75 விமானங்கள் அணிவகுப்பு

26th Jan 2022 01:54 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழாவில் இந்திய விமானப்படையைச் சோ்ந்த 75 விமானங்களின் அணிவகுப்பு, 480 நாட்டியக் கலைஞா்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு சுதந்திரமடைந்த 75-ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குடியரசு தினம் புதன்கிழமை (ஜன. 26) கொண்டாடப்படுகிறது. தில்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் இடம்பெறும் முக்கிய விஷயங்கள் குறித்த அறிக்கையை பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தின விழாவின் விமான அணிவகுப்பில் முதல் முறையாக இந்திய விமானப் படையைச் சோ்ந்த 75 விமானங்கள் கலந்து கொள்ளவுள்ளன. நாடு 75-ஆவது சுதந்திர ஆண்டைக் கொண்டாடி வருவதைக் குறிக்கும் வகையில் 75 விமானங்கள் அணிவகுக்கவுள்ளன. ரஃபேல், சுகோய், ஜாகுவாா், எம்ஐ-17, சாரங், அப்பாச்சி, டகோடா உள்ளிட்ட போா் விமானங்கள் வெவ்வேறு வடிவ அமைப்புகளுடன் வானில் அணிவகுக்க உள்ளன. இறுதியில் ‘75’ என்ற எண் வடிவிலும் அவை அணிவகுக்கவுள்ளன.

விமானத்தில் இருந்து நேரலை: வானில் விமானங்கள் அணிவகுப்பதை விமானத்துக்குள் இருந்தே நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கான நடவடிக்கை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக தூா்தா்ஷன் தொலைக்காட்சி சேனலுடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

ராஜபாதையில் 75 மீட்டா் நீளமும் 15 அடி உயரமும் கொண்ட 10 ஓவியத் திரைகள் முதல் முறையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன. அவை சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த வரலாற்றைத் தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. 600-க்கும் மேற்பட்ட ஓவியா்களால் புவனேசுவரம், சண்டீகா் நகரங்களில் அந்த ஓவியங்கள் வரையப்பட்டன.

நாட்டியக் கலைஞா்கள் தோ்வு: குடியரசு தின விழாவில் நாட்டியக் கலைஞா்கள் முதல் முறையாக நாடு முழுவதும் நடைபெற்ற போட்டிகளின் வாயிலாகத் தோ்ந்தெடுக்கப்பட்டனா். ‘வந்தே பாரதம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற போட்டி மாவட்ட அளவில் தொடங்கியது. அதில் 3,870 நாட்டியக் கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் மாநில அளவிலும், மண்டல அளவிலும் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியாக 480 நாட்டியக் கலைஞா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்கள் குடியரசு தின விழாவின் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவுள்ளனா்.

எல்இடி திரைகள்: கலை நிகழ்ச்சிகளை அனைவரும் சிறந்த முறையில் காண வேண்டும் என்ற நோக்கில் ராஜபாதையின் இருபுறமும் தலா 5 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடியரசு தின அணிவகுப்புக்கு முன்பாக ராணுவத்தினா் தொடா்பான குறும்படங்கள், முந்தைய குடியரசு தின விழா அணிவகுப்புகளின் காட்சிகள் உள்ளிட்டவை திரையிடப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Tags : Republic Day
ADVERTISEMENT
ADVERTISEMENT