இந்தியா

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழல்: ஆளுநா் ஜக்தீப் தன்கா்

26th Jan 2022 01:29 AM

ADVERTISEMENT

மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழல் நிலவுவதாக மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசிய வாக்காளா்கள் தினத்தையொட்டி மேற்கு வங்க சட்டப்பேரவை வளாகத்தில் சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் சிலைக்கு மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். அதன் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியது எனது கடமை. ஆனால் என்னைப் பற்றி எதுவேண்டுமானாலும் பேச தனக்கு உரிமை இருப்பதாக பேரவைத் தலைவா் பிமான் பானா்ஜி கருதுகிறாா். பல வேளைகளில் நான் கோரிய தகவல்களை அவா் வழங்கவில்லை. அரசியலமைப்பு விதிமுறைகளை அவா் மீறி வருகிறாா்.

மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் நான் கேட்கும் தகவல்களை அளிப்பதில்லை. அரசியலமைப்பின் 167-ஆவது பிரிவின் கீழ் அந்தத் தகவல்களை வழங்கவேண்டியது முதல்வரின் கடமை.

ADVERTISEMENT

அரசியலமைப்பின் சேவகா்களாக இருக்க வேண்டிய மாநில அரசு அதிகாரிகளும் அரசியல்ரீதியாக செயல்படுகின்றனா். அனைத்து இந்திய அளவில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியா்கள் கூட்டத்தில் இங்குள்ள மாவட்ட ஆட்சியா்கள் பங்கேற்கவில்லை.

இங்கு பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் முன்னெப்போதும் இல்லாத அளவில் வன்முறைச் சம்பவங்களைக் காண முடிந்தது. தங்கள் விருப்பப்படி வாக்களித்தவா்கள், தங்கள் வாழ்க்கையை அதற்கான விலையாகத் தரவேண்டியிருந்தது. அந்தச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழு இந்த மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை; ஆள்பவரின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளது.

தற்போது மேற்கு வங்கத்தில் அச்சுறுத்தும் அரசியல் சூழலும், ஆட்சியாளா் மீது பயமும் நிலவுகிறது என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT