இந்தியா

'இந்தியாவில் 15 வயதுக்குள்பட்ட 46% பெண் குழந்தைகளுக்கு ரத்தசோகை பாதிப்பு' - ஆய்வில் தகவல்!

DIN

இந்தியாவில் 15 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளில் 46 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய குடும்ப நல ஆய்வில் தெரியவந்துள்ளது. 

தேசிய குடும்ப நல அமைப்பு, ஜனவரி 2015 முதல் நவம்பர் 2021 வரை பெறப்பட்ட ஹீமோகுளோபின் மாதிரிகளின் அடிப்படையில் ரத்த சோகை பாதிப்பு குறித்து ஓர் ஆய்வு நடத்தியது.

இதில், இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ரத்த சோகை உள்ளதாகவும் 55 சதவிகித இளம்பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் 46 சதவிகிதம் பேர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

மேலும், மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் ரத்த சோகை பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 13 சதவிகிதத்திற்கும் அதிகமானவை கடுமையான ரத்த சோகை இருப்பதைக் காட்டுகிறது. 

மாநிலங்களைப் பொருத்தவரையில் அதிகபட்சமாக அசாம் மாநிலத்தில் 72 சதவிகித திருமணமான பெண்களுக்கு ரத்த சோகை உள்ளது. அதைத் தொடர்ந்து ஹரியாணா(69.7 சதவிகிதம்), ஜார்க்கண்ட் (68.4 சதவிகிதம்) மாநிலங்கள் உள்ளன. 

பிரசவத்தின்போது தாய் இறப்பு, ஐந்தில் ஒருவருக்கு ரத்த சோகையால் ஏற்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்தியாவில், கடுமையான ரத்த சோகை பாதிப்பு 3 சதவிகிதத்திற்கு குறைவாகவும், மிதமான ரத்த சோகை 5 முதல் 20 சதவிகிதம் வரையிலும், லேசானது, 25 முதல் 44 சதவிகிதம் வரையிலும் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. 

கடந்த ஏழு ஆண்டுகளில் மொத்தம் 8,57,003 மாதிரிகள் எஸ்.ஆர்.எல் டயக்னாஸ்டிக்ஸ் மூலம் சோதிக்கப்பட்டன.

ரத்த சோகை என்பது உடலில் உள்ள ரத்தச் சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின்களின் எண்ணிக்கை குறைவதாகும். இது உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பொதுவான பொதுவான ஊட்டச்சத்து குறைபாடும்கூட. 

எஸ்.ஆர்.எல் டயக்னாஸ்டிக்ஸ் தலைமைச் செயல் அதிகாரி ஆனந்த் இதுகுறித்து, 'மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் அனைத்து குழுக்களிலும் ரத்த சோகையின் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் ரத்த சோகையை எதிர்த்துப் போராட, பல நிலை அணுகுமுறை தேவைப்படுகிறது. விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நடத்தைகளில் மாறுதல் மற்றும் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத் தேவைகள் ஆகியவை குறித்த சவால்களை உள்ளடக்கியது' என்றார். 

நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர் அனுராக் பன்சால் கூறுகையில், 'ரத்த சோகைக்கான மூல காரணத்தை கண்டறிவது மிகவும் அவசியமானது. இரும்புச்சத்து குறைபாடு அல்லது வைட்டமின் பி12 குறைபாடு ஆகியவை ரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணங்களாக இருந்தாலும், கூடுதல் காரணிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

ஃபோர்டிஸ் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஆதித்யா எஸ். சௌதி, 'இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ரத்த சோகையின் அதிகபட்ச பாதிப்பு (70%) உள்ளது. அசாம், ஹரியாணா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஏன் ரத்தசோகை பாதிப்பு அதிகம் உள்ளது என்பது கண்டறியப்பட வேண்டும். ஏனெனில், ஒப்பீட்டு ஆய்வுகளின்படி, இந்த மூன்று மாநிலங்களிலும் ரத்த சோகை அளவு 2016 -2019க்கு இடையில் 50% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT