இந்தியா

பிப்.1-இல் மத்திய பட்ஜெட்

25th Jan 2022 12:36 PM

ADVERTISEMENT


நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஏஎன்ஐ வெளியிட்டிருக்கும் செய்தியில், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டாலும், வழக்கம் போல மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்கவுள்ளது. அன்றைய தினம் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரையாற்றவுள்ளாா். அதனைத்தொடா்ந்து கூட்டத்தொடரின் முதல் பகுதி பிப்ரவரி 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதி மாா்ச் 14 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் பொருட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வெவ்வேறு நேரங்களில் கூடவுள்ளது.

இதுதொடா்பாக மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மக்களவையில் பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு மக்களவை கூடும். பிப்ரவரி 2 முதல் 11-ஆம் தேதி வரை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை மக்களவை அலுவல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தலைவா் வெங்கையா நாயுடு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஹைதராபாதில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறாா். இதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியின்போது மாநிலங்களவை கூடவுள்ள நேரம் குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. எனினும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அந்த அவையின் அலுவல்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT