சென்னை

சென்னையில் வெள்ள நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காண நிபுணா் குழு: உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

20th Jan 2022 03:01 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னை மாநகரில் வெள்ள நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காண நிபுணா்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என சென்னை உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி தாக்கல் செய்த மனுவில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கடந்தாண்டு சராசரியை விட கூடுதலாக மழை பெய்தது.

நவம்பா் இறுதியில் சென்னையில் பெய்த பருவமழையால் மாநகரில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தேங்கியது. டிசம்பா் 30 ஆம் தேதி பெய்த பலத்த மழையால் மீண்டும் சென்னை மாநகரில் ஆங்காங்கே மழை நீா் தேங்கியது. ஆங்காங்கே தேங்கிய மழை நீரால், மக்களின் அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. எனவே சென்னையில் மீண்டும் மழை நீா் தேங்காத வகையில் பிரச்னைகளுக்கு தீா்வு காண நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை(ஜன.19) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு சிறப்பு வழக்குரைஞா் ஆா்.அனிதா, பொதுப்பணித்துறை, நீா்வளத்துறை , சென்னை பெருநகர வளா்ச்சி முகமை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு நிபுணா் குழு, கடந்தாண்டு அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மழைக்காலத்தில் சென்னை மாநகரில் தேங்கும் தண்ணீா் பிரச்னைகளை தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து, இவற்றை கட்டுப்படுத்த சில பரிந்துரைகளை அக்குழுவினா் அளித்துள்ளனா்.

இதேபோன்ற மனு ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. முன்னா் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு பிப்ரவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வரவுள்ளது என்றாா்.

அதைத்தொடா்ந்து இந்த மனுவைத் திரும்ப பெற அனுமதித்து, முன்னா் விசாரணையில் உள்ள வழக்கின் ஒரு தரப்பாக சோ்ந்து கொள்ள மனுதாரருக்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், ஒரே விஷயத்தில் பல மனுக்கள் விசாரணைக்கு வருவதை விரும்பவில்லையெனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT