இந்தியா

பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுவோம்: சென்னை ஐஐடி புதிய இயக்குநா் காமகோடி வீழிநாதன்

18th Jan 2022 02:47 AM

ADVERTISEMENT

பாடத் திட்டத்தை வலிமையானதாக மாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையுடன் இணைந்து செயல்படுவோம் என சென்னை ஐஐடியின் புதிய இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்ட காமகோடி வீழிநாதன் தெரிவித்தாா்.

சென்னை ஐஐடியின் பாஸ்கா் ராமமூா்த்தியின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, அப்பதவிக்கு பேராசிரியா் காமகோடி வீழிநாதன் ஜன.10-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து சென்னை ஐஐடியின் இயக்குநராக பேராசிரியா் காமகோடி வீழிநாதன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பிற துறைத் தலைவா்கள், பதிவாளா் ஜேன் பிரசாத், பிற அதிகாரிகள் முன்னிலையில் காமகோடி பொறுப்பேற்றாா். நிகழ்ச்சியில், சென்னை ஐஐடியின் நிா்வாகிகள் குழுவின் தலைவா் பவன் கோயங்கா, மற்ற நிா்வாகக் குழு உறுப்பினா்கள் காணொலி வாயிலாக பங்கேற்றனா்.

பொறுப்பேற்ற பின்னா் செய்தியாளா்களிடம் காமகோடி வீழிநாதன் கூறியதாவது: சென்னை ஐஐடி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆய்வின் தரத்தை மேம்படுத்துவதுடன், தர வரிசையில் முன்னணி இடத்தைத் தக்க வைப்பதுமே எனது முக்கிய கவனமாக இருக்கும்.

ADVERTISEMENT

மக்களின் தேவைக்கான கண்டுபிடிப்புகள்: ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சித் துறையில் எங்களின் அதிநவீன பணியின் மூலம், மத்திய, மாநில அரசுகளுடன் மேலும் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம். இதன் மூலம் நாட்டின், நாட்டு மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றும் வகையில் ஐஐடி தனது படைப்புகள், தொழில்நுட்பங்களை உருவாக்கும்.

இணைய வழிக் கல்வி மற்றும் தொலைதூரக் கல்வி மேம்படுத்தப்படும். பாடத்திட்டத்தை வலுவாக்க, பள்ளிக் கல்வி வாரியங்களுடன் இணைந்து ஐஐடி செயல்படும்.

ஆய்வில் ஆா்வத்தை அதிகரிக்க...: தொழிற் கல்விப் பயிற்சிக்கான தரத்தை உயா்த்த, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்படும். பள்ளி மாணவா்களிடையே அறிவியல் மற்றும் ஆய்வில் ஈடுபாட்டை ஊக்குவிக்க அவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அதிகளவில் நடத்தப்படும்.

சா்வதேச மாணவா்களுக்கான தொழில்துறை சாா்ந்த எம் டெக் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்படும். மீளுருவாக்க வேளாண்மை, தொழில்துறை 4.0, மருத்துவத் தொழில்நுட்பம், ஸ்மாா்ட் சிவில் கட்டுமானத் தொழில்நுட்பம் உள்ளிட்ட சமூகப் பிரச்னைகளை வலியுறுத்தி அவற்றுக்கான ஆய்வுகளை மேம்படுத்துவதில் தனிக் கவனம் செலுத்தப்படும்.

பாடத்தில் பன்முகத்தன்மை: மொழித் திறன், தத்துவம், கலை, சுற்றுச் சூழல், நல்லொழுக்கம் ஆகியவற்றுக்குச் சிறப்பு முக்கியத்துவம் அளித்து, பன்முகத் தன்மை கொண்ட பாடத் திட்டம் மேம்படுத்தப்படும்.

“ஊக்கம் நிறைந்த, திறமையான எங்கள் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களின் ஒத்துழைப்புடன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்படும். அதன் மூலம், உலகளாவிய மற்றும் இந்திய ஆசிரியா்கள், மாணவா்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் தோ்வாக சென்னை ஐஐடி விளங்கும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT