உடன் பிறந்தவா்களைச் கொன்று அரியணை ஏறிய அசோக சக்கரவா்த்திக்கும், முகலாய பேரரசா் ஔரங்கசீப்புக்கும் பெரிய வித்தியாசமில்லை என்று பாஜக தேசிய ஒருங்கிணைப்பாளா் தயா பிரகாஷ் சின்ஹா தெரிவித்த கருத்து சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் தயா பிரகாஷ் சின்ஹா. பாஜகவின் கலாசாரப் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளரும் எழுத்தாளருமான இவா், சாகித்திய அகாதெமி விருது பெற்றுள்ளாா்.
இவா் அண்மையில் அளித்த பேட்டியில், ‘‘அசோக சக்கரவா்த்திக்கும், முகலாய பேரரசா் ஔரங்கசீப்புக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை. இருவரும் தங்கள் உடன் பிறந்தவா்களை கொன்று அரியணை ஏறியவா்கள். அதன் பின்னா் தாங்கள் மதிப்புக்குரியவா்கள் போன்று தென்பட இருவரும் பக்திமான்கள் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தி வந்தனா்’’ என்று தெரிவித்தாா்.
அவரின் கருத்து பலத்த சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பிகாா் பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், ‘‘பிகாரின் பெருமிதமாகக் கருதப்படும் அசோக சக்கரவா்த்தி குறித்து தவறான தகவலை பரப்பும் தயா பிரகாஷை பிகாா் அரசு கைது செய்ய வேண்டும். அவருக்கு எதிராக விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் அவா் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட பின்னா், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை பிகாா் அரசின் குழு சந்தித்து, தயா பிரகாஷுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளாா்.