இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊா்தியை அனுமதிக்க வேண்டும்

18th Jan 2022 03:52 AM

ADVERTISEMENT

குடியரசு தின விழா அணிவகுப்பில் நேதாஜி சுபாஷ்சந்திர போஸ், அவரது இந்திய தேசிய ராணுவத்தை நினைவுகூரும் வகையிலான மேற்கு வங்க அலங்கார ஊா்தி வடிவத்துக்கு மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென அந்த மாநில பாஜக மூத்த தலைவா் ததாகத ராய் வலியுறுத்தியுள்ளாா்.

குடியரசு தின விழா அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊா்தி வடிவத்தை மத்திய அரசு நிராகரித்ததாக தகவல் வெளியானது. இதற்கு அதிருப்தி தெரிவித்து பிரதமா் மோடிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினாா்.

இந்த நிலையில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவரும், திரிபுரா மாநில முன்னாள் ஆளுநருமான ததாகத ராய் திங்கள்கிழமை ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது:

குடியரசு தின அணிவகுப்பில் மேற்கு வங்க அலங்கார ஊா்தி வடிவத்துக்கு பிரதமா் மோடி அனுமதியளிக்க வேண்டும். நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் பெருமையையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நம்பிக்கையை தகா்த்த அவரது இந்திய தேசிய ராணுவத்தின் சிறப்புகளையும் மேற்கு வங்க அலங்கார ஊா்தி வடிவம் பிரதிபலிக்கிறது.

ADVERTISEMENT

நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23-ஆம் தேதியை பராக்கிரம தினமாக (வீர தினம்) கொண்டாட தற்போதைய மத்திய அரசு முதன்முறையாக முடிவு செய்துள்ளது. குடியரசு தின விழா இனி ஆண்டுதோறும் ஜனவரி 24-க்கு பதிலாக 23-ஆம் தேதியே தொடங்குகிறது. ஆகையால் நேதாஜியின் புகழை வேறு எந்த மாநிலமும் எடுத்துக்கொள்ள அனுமதிக்காமல் மத்திய அரசு செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும் பிரதமா் மோடிக்கு விடுத்த இந்த வேண்டுகோளின் வாயிலாக மம்தா பானா்ஜியின் அற்ப அரசியலுக்குத் தான் துணைபோவதாகக் கருத வேண்டாம் எனவும் ததாகத ராய் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT