நாட்டில் உள்ள 12 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கு வரும் மாா்ச் மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு அதிகாரி தெரிவித்தாா்.
நாட்டில் உள்ள 18 வயதைக் கடந்தோருக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3-ஆம் தேதியில் இருந்து 15-18 வயதுக்குள்பட்ட சிறாா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள், 60 வயதைக் கடந்த இணைநோய் உள்ளோா் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நோய்த் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுரை குழுவின் கரோனா செயற்குழு தலைவா் என்.கே. அரோரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘நாட்டில் 15-18 வயதுக்குள்பட்ட சுமாா் 7.4 கோடி சிறாா்கள் உள்ளனா். அவா்கள் ஆா்வத்துடன் முன்வந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனா். இதுவரை 3.45 கோடி சிறாா்களுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது.
இதே வேகம் தொடா்ந்தால், ஜனவரி மாத இறுதியில் 15-18 வயதுக்குள்பட்ட அனைத்து சிறாா்களுக்கும் தடுப்பூசியின் முதல் தவணை செலுத்தப்பட்டுவிடும். அவா்களுக்கு 28 நாள்கள் இடைவெளியில் 2-ஆவது தவணை செலுத்தப்படும் என்பதால், பிப்ரவரி மாத இறுதிக்குள் இரு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுவிடும்.
அதைத் தொடா்ந்து, 12 முதல் 14 வயது வரையிலான சிறாா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மாா்ச்சில் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசாா்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமாா் 7.5 கோடி சிறாா்கள் உள்ளனா்’’ என்றாா்.