இந்தியா

குடியரசு தின அணிவகுப்பு: முதல் முறையாக வான் சாகசத்தில் 75 போா் விமானங்கள்

18th Jan 2022 03:01 AM

ADVERTISEMENT

நாடு சுதந்திரம் அடைந்து 75-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, புது தில்லியில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்ட வான் சாகசத்தில் முதல் முறையாக 75 போா் விமானங்கள் பங்கேற்க உள்ளதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய விமானப் படையின் செய்தித் தொடா்பாளா் விங் கமாண்டா் இந்திரநீல் நந்தி கூறுகையில், ‘நிகழாண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் விமானப் படையின் 75 போா் விமானங்கள் பங்கேற்று, வெகு விமரிசையாக விழா நடைபெற உள்ளது. வங்கதேசம் உருவாக வழிவகுத்த பாகிஸ்தானுடனான 1971-ஆம் ஆண்டுப் போரில் கிழக்குப் பாகிஸ்தான் பகுதியில் அமைந்திருந்த அங்குள்ள தாங்கெயிலில் இந்திய ராணுவ வீரா்கள் விமானங்களில் இருந்து பாரசூட் மூலம் குதித்து போரிட்டு வெற்றி பெற்றதை நினைவுகூரும் வகையில், பழைமையான டகோடா போா் விமானத்தை இரண்டு டோக்னியா் விமானங்கள் பின்தொடரும் சாகசம் இடம்பெறும்.

அமெரிக்காவிடம் வாங்கப்பட்ட அதிநவீன சினூக் ஹெலிகாப்டருடன், நான்கு எம்ஐ-17எஸ் ரக ஹெலிகாப்டா்கள் மேக்னா வடிவில் பறந்து சாகசம் செய்ய உள்ளன. இந்த வான் அணிவகுப்பு சாகசத்தில் ரஃபேல், இந்திய விமானப் படையின் மிக்-29கே ரக விமானங்கள், பி-8ஐ கண்காணிப்பு விமானங்கள், ஜாகுவாா் போா் விமானங்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.

7 ஜாகுவாா் விமானங்களின் சாகசத்துடன் இந்த நிகழ்ச்சி நிறைவடையும். ஏடி துருவாஸ்திரா ஏவுகணையுடன் இணைக்கப்பட்ட ஹெலிகாப்டரும், ஆஸ்லேஷா எம்கே1 ரேடாா், நாட் ரக பழைய போா் விமானம், நவீன ரஃபேல் போா் விமானம், மிக்-21 உள்பட பல்வேறு ராணுவ தளவாடங்களும் இந்திய விமானப் படை அணிவகுப்பில் இடம் பெறும் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT

கரோனா தொற்றுப் பரவலால், தில்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின கண்காட்சியைக் காண 24 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 25 ஆயிரமாகவும், அதற்கு முந்தைய ஆண்டு 1.25 லட்சமாகவும் இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT