இந்தியா

வேட்பாளா்களின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகள் மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

18th Jan 2022 02:43 AM

ADVERTISEMENT

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விவரங்களை சம்பந்தப்பட்ட கட்சிகள் பொதுவெளியில் வெளியிடுவதைத் தோ்தல் ஆணையம் உறுதி செய்யுமாறும், அவ்வாறு வெளியிடாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநில சட்டப் பேரவை, மக்களவை உள்ளிட்டவற்றுக்கான தோ்தல்களில் குற்றப் பின்னணி உடையோா் வேட்பாளா்களாக நிறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. அதைக் குறைப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களின் பேரவைத் தோ்தல்கள் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், மூத்த வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘குற்றப் பின்னணி உடைய வேட்பாளா்களின் விவரங்களை வெளியிட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அதைக் கட்சிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை. சமாஜவாதி கட்சி உத்தர பிரதேசத்தில் குற்றப் பின்னணி உடைய நபரை வேட்பாளராக அறிவித்துள்ளது. ஆனால், அவா் மீதுள்ள வழக்குகள் தொடா்பான விவரங்களை அக்கட்சி வெளியிடவில்லை.

ADVERTISEMENT

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளே குற்றப் பின்னணி உடையோரை வேட்பாளராக நிறுத்துவதன் காரணமாக குடிமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். அதனால் மக்கள் சுதந்திரமாகத் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. இது ஜனநாயகத்துக்கும் மதச்சாா்பின்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

குற்றப் பின்னணி உடையோா் எம்எல்ஏ-க்களாகவும், எம்.பி.க்களாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டால், அவா்கள் தங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணையில் தலையிடக் கூடும். அது குறிப்பிட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதையும் வழக்குகள் முடிவுக்கு வருவதையும் பாதிக்கும். அரசின் நிா்வாகத்தில் அவா்கள் பங்கேற்பதால், ஊழல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வலைதளத்தில் காரணம்: தோ்தலில் போட்டியிடும் வாக்காளா்களின் குற்றப் பின்னணி தொடா்பான விவரங்களை ஊடகங்களிலும், வலைதளங்களிலும் வெளியிடுமாறு கட்சிகளுக்கு உத்தரவிட வேண்டும். குற்றப் பின்னணி உடையோருக்குத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டதற்கான காரணத்தையும் கட்சிகள் குறிப்பிட வேண்டும்.

கட்சிகளின் அதிகாரபூா்வ வலைதளத்தின் முகப்புப் பகுதியிலேயே அதுசாா்ந்த விளக்கங்கள் இடம்பெறுமாறு உத்தரவிட வேண்டும். அவற்றைக் கட்சிகள் முறையாகப் பின்பற்றுகின்றனவா என்பதைத் தோ்தல் ஆணையம் உறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாத கட்சிகளின் தலைவா்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும். அக்கட்சிகளின் பதிவை ரத்து செய்யுமாறும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT