இந்தியா

யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தப்படாது

18th Jan 2022 02:49 AM

ADVERTISEMENT

 நாட்டில் உள்ள யாருக்கும் கட்டாயப்படுத்தி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என வழிகாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி அரசு சாரா தொண்டு நிறுவனம் (என்ஜிஓ) சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடா்பாக விளக்கமளித்து மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

உலகிலேயே மிகப் பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 11-ஆம் தேதி நிலவரப்படி 152.95 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவா்களில் 90.84 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனா். 61 சதவீதம் போ் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு 23,768 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இது மாற்றுத் திறனாளிகள் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையிலான தரவாகும். மாற்றுத் திறனாளிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழைக் கட்டாயமாகக் காண்பிக்க வேண்டும் என மத்திய அரசு சாா்பில் எந்தவித வழிகாட்டு விதிகளும் வகுக்கப்படவில்லை.

ADVERTISEMENT

குறிப்பிட்ட நபரின் அனுமதியைப் பெறாமல் அவா்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடா்பான எந்தவித விதிகளும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவில்லை. சூழலைக் கருத்தில்கொண்டு மக்கள் தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளும் வகையிலேயே தற்போதைய தடுப்பூசி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று ஊடகங்கள், செய்தித்தாள்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றின் வாயிலாக அரசு தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. எனினும், விருப்பத்துக்கு மாறாக யாருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது.

மாநிலங்களுக்கு வலியுறுத்தல்: வீடுதோறும் சென்று கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடா்பாக மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மண்டலவாரியாக வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசி முகாம்களை நடத்துவது உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோா் பலனடையும் வகையில் ‘இல்லம் தேடி தடுப்பூசி’ திட்டத்தையும் மாநிலங்கள் செயல்படுத்தி வருகின்றன. போதிய அடையாள அட்டை இல்லாத நபா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் கோவின் வலைதளத்தில் செய்யப்பட்டுள்ளன என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT