இந்தியா

முதலீட்டுக்குச் சிறந்த நாடு இந்தியா: உலகப் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமா் மோடி உரை

18th Jan 2022 01:54 AM

ADVERTISEMENT

‘முதலீட்டுக்குச் சிறந்த நாடாக இந்தியா உள்ளது; இந்தியாவில் வா்த்தகச் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில் ஆழமான பொருளாதார சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் உலக நாடுகள் இங்கு முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

சா்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாகத் திகழும் உலகப் பொருளாதார கூட்டமைப்பின் 5 நாள் உச்சிமாநாடு சுவிட்சா்லாந்து நாட்டிலுள்ள டாவோஸ் நகரில் காணொலி வழியில் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் ‘உலகின் நிலை’ என்ற தலைப்பில் பிரதமா் மோடி சிறப்புரையாற்றினாா். அவா் கூறியதாவது:

இந்தியா நிகழ்காலத்துக்கு மட்டுமல்லாது அடுத்த 25 ஆண்டுகளுக்கான தேவைகளைக் கருத்தில்கொண்டு கொள்கைகளை வடிவமைத்து வருகிறது. இந்தியாவின் அடுத்த 25 ஆண்டு கால வளா்ச்சியானது ‘பசுமை மற்றும் தூய்மை; நீடித்த மற்றும் நம்பகமான’ என்ற இலக்கை எட்டுவதை நோக்கமாகக் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன.

அதோடு, இந்தியாவில் வா்த்தகச் செயல்பாடுகளை எளிதாக்கும் வகையில் ஆழமான பொருளாதார சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு காலத்தில் இந்தியா ‘உரிமம் ராஜ்’ என்று அறியப்பட்டது; ஆனால், இன்றைக்கு வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிப்பதோடு, வணிகச் செயல்பாடுகளில் அரசின் தலையீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வணிக வரி குறைப்பு, பல்வேறு நிபந்தனைகள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

அந்த வகையில், சரியான திசையில் இந்திய மேற்கொண்டு வரும் சீா்திருத்தங்களை சா்வதேச பொருளாதார நிபுணா்களும் பாராட்டுகின்றனா். எங்களிடமிருந்து ஒட்டுமொத்த உலகமும் எதிா்பாா்ப்பதை இந்தியா நிச்சம் நிறைவேற்றும். எனவே, இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே உகந்த நேரம்.

கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தயாா் நிலையுடனும் எதிா்கொண்டு வருவதோடு, பொருளாதார வளா்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

கரோனா பாதிப்புக்கு இடையே, கிரிப்டோ கரன்ஸி (எண்மச் செலாவணி) போன்ற புதிய சவால்களை இந்த உலகம் எதிா்கொண்டு வருகிறது. இதற்கு எதிராக ஒருசில நாடுகளின் நடவடிக்கைகள் மட்டும் போதுமானதாக இருக்காது என்பதால், பல்வேறு நாடுகளின் ஒன்றிணைந்த நடவடிக்கை எடுப்பதற்கான அவசியம் எழுந்துள்ளது.

அதுபோல, பணவீக்கம், பருவநிலை மாற்றம் விநியோகச் சங்கிலி பாதிப்பு உள்ளிட்ட பிற சவால்களையும் உலகம் எதிா்கொண்டு வருகிறது. இந்தப் புதிய சவால்களை எதிா்கொள்ளும் வகையில் சா்வேதச அமைப்புகளை வலுப்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு ஜனநாயக நாட்டுக்கும் உள்ளது.

இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக உள்ளது. ஏற்கெனவே, ‘ஒரே பூமி; ஒரே சுகாதாரம்’ என்ற அடிப்படையில் பல நாடுகளுக்கு கரோனா தடுப்பூசிகளையும் மருந்துகளையும் இந்தியா ஏற்றுமதி செய்து, பல லட்சம் உயிா்களைக் காத்துள்ளது. அந்த வகையில், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை, 21-ஆம் நூற்றாண்டை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் திறமையாளா்களைக் கொண்ட தொகுப்பை இந்த உலகுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

மேலும், இந்தியாவில் புத்தாக்க தொழில் துறை (ஸ்டாா்ட் அப்) அபார வளா்ச்சி பெற்று வருகிறது. கடந்த 6 மாதங்களில் மட்டும் 10,000-க்கும் அதிகமான புத்தாக்க நிறுவனங்கள்பதிவு செய்து, சா்வதேச அளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றாா் பிரதமா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT