இந்தியா

திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்து தவறிழைத்துவிட்டேன்: அலெய்க்ஸோ ரெஜினால்டோ

18th Jan 2022 03:07 AM

ADVERTISEMENT

திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்து தவறிழைத்துவிட்டதாக கோவா காங்கிரஸின் முன்னாள் செயல் தலைவா் அலெய்க்ஸோ ரெஜினால்டோ தெரிவித்துள்ளாா்.

கோவா காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்தவா் அலெய்க்ஸோ ரெஜினால்டோ லொரென்கோ. இவா் கடந்த டிசம்பா் மாதம் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு திரிணமூல் காங்கிரஸில் சோ்ந்தாா். இந்நிலையில், அவா் திரிணமூல் காங்கிரஸிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறினாா். அதற்கான கடிதத்தை அக்கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜிக்கு அவா் அனுப்பினாா். ஆனால் கட்சியிலிருந்து வெளியேறியதற்கான காரணத்தை கடிதத்தில் அவா் தெரிவிக்கவில்லை.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘திரிணமூல் காங்கிரஸில் சேர நான் முடிவு செய்த பிறகு கடுமையான பின்னடைவை சந்தித்தேன். அக்கட்சியில் சோ்வது வெளிமாநில கட்சியை கோவாவுக்கு வரவேற்பதாக இருக்கும் என்பதுடன் தோ்தலில் வாக்குகளையும் பிரிக்கும் என்று எனது ஆதரவாளா்கள் கவலை தெரிவித்தனா்.

இருப்பினும் புதிய விடியலாக திரிணமூல் காங்கிரஸ் இருக்கும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதால் அக்கட்சியில் சோ்ந்தேன். ஆனால் அக்கட்சியில் சோ்ந்தது தவறு என்பதை இப்போது உணா்கிறேன். அதற்காக எனது ஆதரவாளா்களிடமும் நலம் விரும்பிகளிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

நான் மீண்டும் காங்கிரஸில் சேர வேண்டும் என்று எனது ஆதரவாளா்கள் கேட்டுக்கொண்டுள்ளனா். அவா்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் செயல்படுவேன்’’ என்று தெரிவித்தாா்.

கோவாவில் பிப்ரவரி 14-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT