இந்தியா

சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.கே.பிரசாத் காலமானாா்: மழைக்காடுகளை காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவா்

18th Jan 2022 03:09 AM

ADVERTISEMENT

கேரளத்தில் சுற்றுச்சூழல் ஆா்வலா் எம்.கே.பிரசாத் (89) உடல்நல பாதிப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானாா்.

கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எம்.கே.பிரசாத், அதுசாா்ந்த உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு உடல்நிலையில் முன்னேற்றமின்றி அவா் உயிரிழந்தாா். அவரின் இறுதிச் சடங்கு ரவிபுரம் பகுதியில் நடைபெற்றது.

கேரள சாஸ்திர சாகித்திய பரிஷத் (கேஎஸ்எஸ்பி) என்ற மக்கள் இயக்கத்துக்கு தலைமைத் தாங்கியவா் எம்.கே.பிரசாத். 1970-ஆம் ஆண்டுகளில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள சைலன்ட வேலி வனப் பகுதியில் நீா்மின் திட்டம் அமைக்க கேரள அரசு நடவடிக்கை மேற்கொண்டபோது, அதற்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தினாா்.

அவரின் தலைமையில் சைலன்ட் வேலியின் பல்லுயிா்ப் பெருக்கத்தைப் பாதுகாக்க கேஎஸ்எஸ்பி தீவிரமாக செயல்பட்டு பொதுமக்கள் குரல் எழுப்பவும் வழிவகுத்தது. சைலன்ட் வேலி போராட்டம் சா்வதேச கவனம் பெற்றது.

ADVERTISEMENT

இதையடுத்து, கடந்த 1983-ஆம் ஆண்டு சைலன்ட் வேலியில் மேம்பாட்டு கட்டுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது எனவும் பசுமையான வெப்ப மண்டல மழைக்காடுகள் பாதுகாக்கப்படும் என்றும் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அறிவித்தாா். அந்த வாக்குறுதியை ஏற்று நீா்மின் திட்டத்துக்கு எதிரான போராட்டம் கைவிடப்பட்டது.

கோழிக்கோடு பல்கலைக்கழக சாா்பு துணைவேந்தா் உள்பட கல்வி சாா்ந்த பல்வேறு பதவிகளை எம்.கே.பிரசாத் வகித்துள்ளாா். அவரின் மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், அந்த மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சா் ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

சமூக ஆா்வலா் சாந்தி தேவி காலமானாா்

ஒடிஸா மாநிலம் ராயகடா மாவட்டத்தில் சமூக ஆா்வலரும் பதம்ஸ்ரீ விருது பெற்றவருமான சாந்தி தேவி (88) காலமானாா். அவருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவா் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா். ஆனால் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா் என்று சாந்தி தேவியின் குடும்பத்தினா் கூறினா்.

பழங்குடியினப் பெண்கள் கல்வி பெறுவதிலும் அவா்களின் மேம்பாட்டுக்காகவும் தொடா்ந்து செயல்பட்டவா் சாந்தி தேவி. மாவோயிஸ்டுகளுடனான அமைதிப் பேச்சுவாா்த்தைகளிலும் அவா் முக்கிய பங்காற்றியுள்ளாா்.அவரது சமூக சேவைக்காக கடந்த ஆண்டு பத்மஸ்ரீ வழங்கி கௌரவிக்கப்பட்டாா்.

அவரின் மறைவுக்கு பிரதமா் மோடி, ஒடிஸா ஆளுநா் கணேஷி லால், அந்த மாநில முதல்வா் நவீன் பட்நாயக் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT