புது தில்லி: இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாள்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பொதுமுடக்க கட்டுப்பாடுகளின் பயனாக, நாட்டில் இன்று புதிய கரோனா பாதிப்பு குறைந்துள்ளது.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதும், பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதிநாள்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பிறப்பித்தன.
இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை
இந்த நிலையில், நாள்தோறும் புதிய கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலை மாறி, இன்று புதிய பாதிப்பு நேற்றைய எண்ணைக்கையைக் காட்டிலும் 20 ஆயிரம் அளவுக்குக் குறைந்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தில்,
நாட்டில் இன்று காலையுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில் புதிதாக 2,38,018 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய புதிய பாதிப்பைக் காட்டிலும் 20,071 குறைவாகும்.
கரோனா பாதித்து சிகிச்சையிலிருந்த 310 பேர் நேற்று பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் கரோனாவிலிருந்து 1,57,421 பேர் குணமடைந்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, நாட்டில் 17,36,628 கரோனா நோயாளிகள் உள்ளனர். நாள்தோறும் கரோனா உறுதி செய்யப்படும் விகிதமானது 14.43 சதவீதமாக உள்ளது.
நாட்டில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,891 ஆக உள்ளது.