தில்லி ராஜபாதையில் நடைபெறவுள்ள குடியரசு நாள் விழாவில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் பட்டியலில் தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், கட்டுமான தொழிலாளர்கள் இடம்பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி தில்லி ராஜபாதையில் குடியரசு நாள் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், நிகழ்வாண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், விழா ஏற்பாடுகள் குறித்து பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குடியரசு நாள் விழாவை பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் நோக்கில் இந்தாண்டு சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராஜபாதையில் நடைபெறும் விழாவில் அனைத்து தரப்பு மக்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பால், இந்தாண்டு விழாவில் பங்கேற்க 5,000 முதல் 8,000 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க ஆலோசனை நடைபெற்று வருகின்றன. இருப்பினும், பார்வையாளர்கள் எண்ணிக்கை குறித்து இறுதியாகவில்லை. கடந்தாண்டு 25,000 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு கருதி இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும், 6 அடி இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
நேரலை நிகழ்வை பார்வையாளர்கள் இடையூறின்றி பார்ப்பதற்காக 10 பெரிய திரைகள் ராஜபாதையில் பொறுத்தப்படவுள்ளன.
வான்வழி சாகசம் நடத்துவதற்கு ஏதுவாக காலை 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு நிகழ்வு தொடங்கப்படும். 75ஆவது சுதந்திர ஆண்டை போற்றும் விதமாக 75 விமானங்கள் சாகசத்தில் பங்கேற்கவுள்ளன.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலாச்சார நிகழ்ச்சியில் பங்குபெறுவதற்காக ஏற்கனவே மாவட்ட, மண்டல வாரியாக போட்டிகள் நடத்தி மத்திய அமைச்சகத்தால் 600 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசு நாளன்று விஜய் செளக் முதல் இந்திய கேட் வரையிலான புனரமைக்கப்பட்ட ராஜபாதை திறக்கப்படவுள்ளன.