கோவா தேர்தலில் போட்டியிடவுள்ள ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை புதன்கிழமை அறிவிக்கவுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் இன்று தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இதில், கோவா பேரவைக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக பிப். 14இல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலில், கோவாவை பொறுத்தவரை ஆளும் பாரதிய ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் என பலமுனைப் போட்டிகள் நிலவுகிறது.
இந்நிலையில், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பெயரை நாளை பனாஜியில் நடைபெறவுள்ள செய்தியாளர்கள் சந்திப்பின்போது அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பார் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
முன்னதாக, இன்று பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை கேஜரிவால் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.