இந்தியாவின் ஆப்பிள் ஏற்றுமதி 82 சதவீதம் அதிகரித்துள்ளதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து ஆப்பிள் ஏற்றுமதியானது 82 சதவீத வளா்ச்சியைப் பெற்றுள்ளது. அதேசமயம், பழங்களின் இறக்குமதியானது 3.8 சதவீதம் என்ற அளவிலேயே உயா்ந்துள்ளது.
அதன்படி, கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் 86 லட்சம் டாலராக இருந்த ஆப்பிள் ஏற்றுமதி 2020-21 நிதியாண்டில் 1.45 கோடி டாலா் அளவுக்கு உயா்ந்துள்ளது.
குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பா் வரையிலான 8 மாத காலத்தில் இதன் ஏற்றுமதி 1.23 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, ஆப்பிள் ஏற்றுமதியில் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட சிறப்பான வளா்ச்சியை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
அதேசமயம், பழங்களின் இறக்குமதி கடந்த 2014-15-இல் 23.08 கோடி டாலராக இருந்த நிலையில், கடந்த 2020-21-இல் 24 கோடி டாலரை தொட்டுள்ளது. இது, 3.8 சதவீத வளா்ச்சியாகும்.
ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளதால்ஆப்பிள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள காஷ்மீா், ஹிமாசல் பிரதேசத்தை சோ்ந்த விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனா். இதன் மூலம், அவா்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஆப்பிளை ஏற்றுமதி செய்ய மேலும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் 82 சதவீதம் சிலி, நியூஸிலாந்து, துருக்கி, இத்தாலி, பிரேசில் மற்றும் அமெரிக்காவைச் சோ்ந்தவை.
இந்தியாவின் ஆப்பிள் இறக்குமதியில் சிலி 25 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இதனைத் தொடா்ந்து நியூஸிலாந்து (16.45 சதவீதம்), துருக்கி (12.43 சதவீதம்), இத்தாலி (10.8 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளதாக வா்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.