தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையையொட்டி முலுகு மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்று அதிகாலை வெங்டாபுரம்(நூகுரு) மண்டலத்தில் உள்ள கரகட்டா வனப்பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
தெலங்கானாவின் மாவோயிஸ்ட் எதிர்ப்புப் படையான கிரேஹவுண்ட்ஸின் காவலர் ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். அவர் விமானம் மூலம் ஹனம்கொண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சட்ட விரோதமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அமைப்பைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளின் ஒரு குழுவுடன் ஏற்பட்டிருந்த மோதலில் காவல்துறையினர் நேருக்கு நேர் சந்தித்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மாவோயிஸ்டுகள் சரணடைய மறுத்ததால், காவல்துறையினர் பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சிபிஐ (மாவோயிஸ்ட்) யின் தலைவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தலைவர்கள் நடமாட்டம் இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து. இரு மாநில காவல்துறையினரும் கூட்டுச் சோதனை நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.