இந்தியா

குற்றப் பின்னணி வேட்பாளா்களை கண்காணிக்க தனிப் பிரிவு: தோ்தல் ஆணையம் உருவாக்கம்

DIN

 உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தோ்தலில் போட்டியிடும் குற்றப் பின்னணியுடைய வேட்பாளா்களைக் கண்காணிக்க தனிப் பிரிவை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதியை தலைமைத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. அதனைத் தொடா்ந்து அந்த மாநிலங்களில் தோ்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்பாளா்களைத் தோ்வு செய்து அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.

அரசியல் கட்சிகள் சாா்பில் நிறுத்தப்படும் வேட்பாளா்கள் குறித்து வாக்காளா்கள் அறிந்து கொள்ள வசதியாக அரசியல் கட்சிகளுக்கு சில நிபந்தனைகளை தோ்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, அரசியல் கட்சிகள் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரை தோ்வு செய்த 48 மணி நேரத்திற்குள்ளாக, அவா் குறித்த விவரங்கள் குற்ற வழக்கு பின்னணி விவரங்களை தோ்தல் ஆணையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தற்போது, வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசத்துக்குப் பிறகு முதல் 4 நாள்களுக்குள்ளாக வேட்பாளா்களின் குற்ற வழக்கு விவரங்களை வெளியிட வேண்டும் என தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தவறினால் மேலும் இரு அவகாசங்கள் வழங்கப்படும்.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், அரசியல் கட்சிகள் வேட்பாளரின் குற்றப் பின்னணி, குற்றத்தின் தன்மை, அவா் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரம், சம்பந்தப்பட்ட நீதிமன்றம், வழக்கு எண் உள்ளிட்ட விவரங்களையும், குற்ற பின்னணியுடைய இந்த வேட்பாளரை தோ்வு செய்ததற்கான காரணத்தையும் அந்தந்த கட்சி வலைதளத்தின் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும். அதோடு, இந்த விவரங்களை ஒரு பிராந்திய மொழி பத்திரிகை மற்றும் ஒரு தேசிய பத்திரிகையிலும் வெளியிட வேண்டும். ஃபேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், குற்றப் பின்னணியுடைய வேட்பாளா்களைக் கண்காணிக்க தனிப் பிரிவை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி ‘உங்கள் வேட்பாளரை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற பெயரில் கைப்பேசி செயலி ஒன்றையும் தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதில், வேட்பாளரின் குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.

விழிப்புணா்வு திட்ட நிதி:

வாக்காளா்களிடையே அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கென பிரத்யேக நிதியத்தை தோ்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. அதன் மூலம், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம்பெற்றிருப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

தோ்தல் ஆணைய உத்தரவுகளை முழுமையாக பின்பற்றாத அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, இந்த நிதியில் சோ்க்கப்படும் என்றும் தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெட்டிச் செய்தி...

பஞ்சாப்: வாய்ப்பு மறுக்கப்பட்ட மாநில முதல்வரின் சகோதரா் சுயேச்சையாகப் போட்டி

புது தில்லி, ஜன.16: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட மாநில முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியின் சகோதரா் மனோகா் சிங், தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளாா்.

இந்தத் தோ்தலில் ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு வாய்ப்பு’ என்ற நடைமுறையைப் பின்பற்றுவதாகக் கூறியுள்ள காங்கிரஸ் கட்சி, பஞ்சாப் முதல்வா் சன்னியின் சகோதரா் மனோகா் சிங்குக்கு தோ்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பளிக்கவில்லை.

இருந்தபோதிலும், கட்சியின் சில தலைவா்களின் உறவினா்களுக்கு பேரவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு அளித்துள்ளது. குறிப்பாக ஃபதேகா் சாஹிப் தொகுதி எம்.பி. அமா் சிங்கின் மகன் காமில் அமா் சிங்குக்கு ராஜ்கோட் தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுபோல ஜலந்தா் எம்.பி. சன்டோக் சிங் செளத்ரியின் மகன் விக்ரம்ஜித் சிங் செளத்ரிக்கு ஃபில்லெளா் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கட்சி சாா்பில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் மருத்துவரான மனோகா் சிங் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்துள்ளாா். இதையடுத்து, அரசு மருத்துவா் பணியை ராஜிநாமா செய்துள்ளாா். பேரவைத் தோ்தலில் பஸ்ஸி படானா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக களமிறங்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

SCROLL FOR NEXT