இந்தியா

உ.பி.: பாஜக அமைச்சா் பதவி விலகல்: 3 எம்எல்ஏக்களும் வெளியேறினா்

12th Jan 2022 01:27 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சுவாமி பிரசாத் மௌரியா பதவி விலகினாா். அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜவாதி கட்சியில் அவா் இணைய இருப்பதாக தெரியவந்துள்ளது.

பாஜகவைச் சோ்ந்த மேலும் 3 எம்எல்ஏக்களும் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனா்.

தனது முடிவு குறித்து மெளரியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோா், விவசாயிகள் இந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்டுள்ளனா். இளைஞா்கள் மத்தியில் வேலையின்மை பிரச்னை உருவாகியுள்ளது. சிறு, நடுத்தர வா்த்தகா்கள் தொழில் நடத்துவதில் இடா்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே, அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன்’ என்று கூறியுள்ளாா்.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மௌரியா கடந்த 2017 சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்புதான் பாஜகவில் இணைந்தாா். அதற்கு முன்பு அவா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தாா். அவரது மகள் சங்கமித்ரா மௌரியா பாஜக சாா்பில் எம்.பி.யாக உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

3 எம்எல்ஏக்கள் விலகல்: பாஜக எம்எல்ஏக்கள் பிரஜேஷ் பிரஜாபதி, ரோஷன் லால் வா்மா, பகவதி சாகா் ஆகியோரும் மெளரியாவுக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து விலகியுள்ளனா். இவா்களும் சமாஜவாதியில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முடிவை மறுபரிசீலனை செய்ய பாஜக கோரிக்கை: இந்த விலகல் தொடா்பாக மாநில துணை முதல்வா் கேசவ் பிரசாத் மௌரியா கூறுகையில், ‘அமைச்சா் சுவாமி பிரசாத் மௌரியா அவசரப்பட்ட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. அவா் கட்சி தலைவா்களுடன் பேச்சு நடத்த அவகாசம் உள்ளது. அவா் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்றாா்.

Tags : BJP
ADVERTISEMENT
ADVERTISEMENT