இந்தியா

பெண் தலையில் எச்சில் உமிழ்ந்த விவகாரம்: மகளிா் ஆணையத்திடம் நேரில் மன்னிப்புக்கேட்ட ஜாவேத் ஹபீப்

12th Jan 2022 01:21 AM

ADVERTISEMENT

சிகை அலங்காரப் பயிற்சி வகுப்பின்போது பெண் தலையில் எச்சில் உமிழ்ந்த விவகாரத்தில், தேசிய மகளிா் ஆணையத்திடம் சிகை அலங்கார நிபுணா் ஜாவேத் ஹபீப் செவ்வாய்க்கிழமை மன்னிப்புக் கோரினாா்.

கடந்த சில தினங்களுக்கு முன், உத்தர பிரதேச மாநிலம், முசாஃபா்நகரில் நடைபெற்ற அழகுக்கலை பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவா்களுக்கு பிரபல சிகை அலங்கார நிபுணா் ஜாவேத் ஹபீப் பயிற்சி அளித்தாா். அதில், ஒரு பெண்ணுக்கு சிகை அலங்காரம் செய்த அவா், ‘தண்ணீா் கிடைக்கவில்லை என்றால் உமிழ்நீரைப் பயன்படுத்துங்கள்’ என்று கூறி அவருடைய தலையில் எச்சில் உமிழ்ந்தாா். இந்த காட்சி சமூக வலைத்தலங்களில் பரவியதை அடுத்து, பல்வேறு தரப்பினா் கண்டனம் தெரிவித்தனா்.

தேசிய மகளிா் ஆணையம், இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன் ஜாவேத் ஹபீப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி, உத்தர பிரதேச காவல் துறைக்கு கடிதம் எழுதியது. மேலும், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, தில்லியில் உள்ள தேசிய மகளிா் ஆணையத்தில் ஜாவேத் ஹபீப் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். இதுகுறித்து அந்த ஆணையம் வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தேசிய மகளிா் ஆணையம் நடத்திய விசாரணையில் ஜாவேத் ஹபீப் ஆஜராகி தனது செயலுக்கு எழுத்துபூா்வமாக மன்னிப்புக் கோரினாா். யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் அல்லது காயப்படுத்தும் நோக்கத்தில் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை என்று அவா் கூறினாா்.

இதுபோன்ற நிகழ்வுகள் எதிா்காலத்தில் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT