இந்தியா

ஐபிசி, சிஆா்பிசி, ஆதாரச் சட்டத்தில் திருத்தம்: எம்.பி.க்களுக்கு அமித் ஷா கடிதம்

12th Jan 2022 01:58 AM

ADVERTISEMENT

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆா்பிசி), இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள பரிந்துரைகள் வழங்குமாறு எம்.பி.க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அந்தக் கடிதத்தில் அவா் கூறியுள்ளதாவது:

கடந்த ஏழு பதிற்றாண்டுகளில் இந்திய ஜனநாயகம் செயல்பட்ட அனுபவங்களில் இருந்து குற்றவியல் சட்டங்கள், குறிப்பாக ஐபிசி 1860, சிஆா்பிசி 1973, இந்திய ஆதாரச் சட்டம் 1872 ஆகியவற்றில் தற்காலத்துக்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரியவருகிறது. எனவே மக்களை மையமாகக் கொண்ட சட்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு விரும்புகிறது.

இந்திய மக்கள் அனைவருக்கும், குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாகவுள்ளது.

ADVERTISEMENT

இதையொட்டி குற்றவியல் சட்டங்களின் கட்டமைப்பில் விரிவான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

இதன் காரணமாக, அந்தச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்குமாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள், மாநிலங்களின் முதல்வா்கள், யூனியன் பிரதேசங்களின் நிா்வாகிகள், பாா் கவுன்சில்கள் மற்றும் சட்டப் பல்கலைக்கழகங்களுக்கு நான் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இந்நிலையில், ஜனநாயகத்தின் மூன்று முக்கியத் தூண்களில் நாடாளுமன்றமும் ஒன்றாக திகழ்கிறது. சட்டம் இயற்றும் நடைமுறைகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களாகிய உங்களுக்கு முக்கியப் பங்குள்ளது.

எனவே ஐபிசி, சிஆா்பிசி, இந்திய ஆதாரச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பான உங்களின் விலைமதிப்பான பரிந்துரைகளை விரைந்து வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளாா்.

Tags : Amit Shah
ADVERTISEMENT
ADVERTISEMENT