இந்தியா

வைஷ்ணவ தேவி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி: மோடி நிவாரணம் அறிவிப்பு

1st Jan 2022 10:58 AM

ADVERTISEMENT


ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த பக்தர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 

புத்தாண்டையொட்டி, ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் துரதிர்ஷ்டவசமான ஏராளமான பக்தர்கள் கூடியதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. 

கோயில் கருவறை வெளியே 3-ஆவது நுழைவாயில் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

இதில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இதையும் படிக்க | பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் பலி

மேலும் 20 பேர் கூட்டநெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் மாதா வைஷ்ணவ தேவி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது.

கோயில் நிர்வாகிகள், அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் கோயில் நிர்வாகம் பிரத்யேகமாக தொடர்பு கொள்வதற்காக 01991234804, 01991234053 என்ற தொலைபேசி உதவி எண்ணை அறிவித்துள்ளது.  

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, உள்துறை முதன்மைச் செயலாளர், ஜம்மு மண்டல ஏடிஜிபி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் ஆணையர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

மோடி இரங்கல்:  
உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அங்கு நிலவும் சூழலை ஆய்வு செய்வது குறித்து ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங் மற்றும் நித்யானந்த் ராய் ஆகியோரிடம் பேசியுள்ளதாகவும் பிரதமர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நிவாரணம்: இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார். 

அதாவது, வைஷ்ணவி தேவி கோயில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 1,431 ஆக அதிகரிப்பு 

ADVERTISEMENT
ADVERTISEMENT