அன்னை தெரஸா அறக்கட்டளை வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அதன் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம்சாட்டியிருந்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ அதற்கு வழங்கப்பட்ட உரிமம் கடந்த் அக்டோபர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. இருந்தபோதிலும், அந்த அறக்கட்டளை உள்பட நிலுவையில் இருந்த பிற அறக்கட்டளைகளின் பதிவுக் காலத்தை டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
அதே நேரம், அன்னை தெரஸா அறக்கட்டளையின் பதிவு புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பரிசீலித்தபோது, அதில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, உரிய நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
அந்த அறக்கட்டளையின் பதிவு செல்லத்தக்க காலம் வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதால், அதன் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. மாறாக, அந்த அறக்கட்டளை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தது.
இந்தியாவில் இயங்கும் அரசு சாரா அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெற வேண்டும். இம்மாதிரியாக பெறப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் நேற்று இரவுடன் காலாவதியாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | அன்னை தெரஸா அறக்கட்டளைவங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
இந்த 6,000 அரசு சாரா அமைப்புகளில், பெரும்பாலானவை உரிமத்தை புதுப்பிப்பதற்கு விண்ணப்பிக்கவில்லை என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அமைச்சகத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "காலக்கெடுக்குள் (வெள்ளிக்கிழமை) விண்ணப்பிக்கும்படி நினைவூட்டல்கள் அனுப்பப்பட்டன. ஆனால், பலர் விண்ணிப்பிக்கவில்லை. இம்மாதிரியாக இருக்கும்போது, எப்படி அனுமதி வழங்க முடியும்" என்றார்.
தற்போது வரை, ஆக்ஸ்பாம் இந்தியா அறக்கட்டளை, ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவ சங்கம் மற்றும் தொழுநோய் மிஷன் என 12,000க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் காலாவதியாகி உள்ளது. இந்திய காசநோய் சங்கம், இந்திரா காந்தி தேசிய கலை மையம், இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம் ஆகியவற்றின் உரிமமும் காலாவதியாகியுள்ளது.
தற்போது, இந்தியாவில் 16,829 அரசு சாரா அமைப்புகளிடம் மட்டும்தான் உரிமம் உள்ளது. வரும் மார்ச் 31ஆம் தேதி வரையோ அல்லது மற்ற அரசு சாரா அமைப்புகளின் உரிம விண்ணப்பங்கள் குறித்து முடிவு எடுக்கும் வரை, அளிக்கப்பட்ட உரிமம் செல்லும்.
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ், இந்தியாவில் மொத்தம் 22,762 அரசு சாரா அமைப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னை தெரஸா அறக்கட்டளையின் கீழ், நாடு முழுவதும் ஏழைகள், நோய்வாய்ப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கு என பல்வேறு காப்பகங்கள் இயங்கிவருகின்றன.
முன்னதாக, குஜராத்தில் அன்னை தெரஸா அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் மத மாற்றம் செய்யப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.