வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி நாள் என்ற நிலையில், இதுவரை ஒட்டுமொத்தமாக 5.89 கோடி பேர் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான இணையதளம் மூலம், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவு பெற்ற நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை சுமார் 5.89 கோடி பேர் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிக்க.. புத்தாண்டில் இஸ்ரேலிலிருந்து வந்திருக்கும் சற்று கவலை தரும் செய்தி
கடைசி நாளான டிசம்பர் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் 46.11 லட்சம் பேர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தனர். இது, 2020-21ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடைசி நாளாக இருந்த கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி ஒரே நாளில் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 31.05 லட்சமாகவும், அந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக கணக்கை தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 5.95 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நாளில் ஏராளமானோர் தங்களது வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இது குறித்து வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஒட்டமொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 5.89 கோடி வருமான வரிக் கணக்குத் தாக்கலில், ஊதியம், வீடு உள்ளிட்ட சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபா்களுக்கான ஐடிஆா்-1 49.6 சதவீதமாகவும், ஹிந்து கூட்டுக் குடும்ப வருமானம், தொழில், வா்த்தகம் மூலம் தனிநபா் ஈட்டும் வருமானம் ரூ.50 லட்சம் வரை இருந்தால் பதிவு செய்யும் ஐடிஆா்-4 படிவம் மூலம் 27.2 சதவீதம் பேரும் அடங்குவர்.
வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நினைவூட்டியிருந்தது.
வழக்கமாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதியாகும். ஆனால், கரோனா பேரிடர் காரணமாக இது டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
2019-20 நிதியாண்டுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு 2021, ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியோடு கால அவகாசம் நிறைவு பெற்றுள்ளது.