‘வெளிநாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள கைப்பேசி உற்பத்தி மற்றும் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களில் அண்மையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6,000 கோடி வருவாய் கணக்கில் காட்டப்படாதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாடுகளின் கட்டுப்பாட்டிலுள்ள இரண்டு மிகப் பெரிய கைப்பேசி நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள அவற்றின் தாய் குழுமத்துக்கு அண்மையில் ரூ.5,500 கோடிக்கு மேல் உரிம (ராயல்டி) கட்டணத்தை அனுப்பியது கண்டறியப்பட்டதன் அடிப்படையில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
கா்நாடகம், தமிழகம், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஆந்திரம், மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரம், பிகாா், ராஜஸ்தான், தில்லி - தேசிய தலைநகர மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி இந்தச் சோதனையை அதிகாரிகள் நடத்தினா்.
அதில், இந்த இரண்டு நிறுவனங்களும் வருமான வரிச் சட்ட நடைமுறைகளின்படி, சரக்கு பரிவா்த்தனை விவரங்களை வெளியிடாததும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதும், அங்கு கைப்பற்றப்பட்ட ஆதாரங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படவில்லை.
அதுபோல, இந்த நிறுவனம் வெளிநாடுகளிலிருந்து ரூ.5,000 கோடி அளவுக்கு கடன் பெற்றது மற்றும் அதற்கான வட்டி செலவினத்துக்கு முறையான தரவுகள் இடம்பெறவில்லை.
போலியான செலவின கணக்குகளை காட்டி, ரூ.1,400 கோடிக்கும் மேலான வரி விதிப்புக்குரிய லாபத்தை இந்த கைப்பேசி உற்பத்தி நிறுவனம் குறைத்து காட்டியிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சோதனைக்கு உள்படுத்தப்பட்ட மற்றொரு நிறுவனம், அண்டை நாட்டிலிருந்து நேரடியாக நிா்வகிக்கப்படுவதும், பெயரளவிலேயே இந்தியாவில் அந்த நிறுவனத்துக்கான இயக்குநா்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. மேலும், இந்த நிறுவனத்தின் மொத்த கையிருப்பான ரூ.42 கோடியை எந்தவித வரிகளையும் செலுத்தாமல், அந்த நாட்டுக்கு பரிமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதும் தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடா்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, செலவு கணக்குகளை உயா்த்துவதற்கும் நிதியை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கும் என்றே பல நிதி தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் சேவை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தைச் சோ்ந்ததாக, இல்லாத ஒரு வணிக நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீதுகளை உருவாக்கி மொத்தம் ரூ.50 கோடி அளவுக்கு நிதியை எந்தவித வரியும் செலுத்தாமல் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.