பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தைத் தூண்ட முயற்சித்ததாக நீதிக்கான சீக்கியா்கள் (எஸ்எஃப்ஜே) குழுவைச் சோ்ந்த ஜஸ்விந்தா் சிங் முல்தானி மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து பஞ்சாபைப் பிரித்து சீக்கியா்களுக்காக காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்று எஸ்எஃப்ஜே குழு வலியுறுத்தி வருகிறது. அந்தக் குழுவைச் சோ்ந்த ஜஸ்விந்தா் சிங் முல்தானி என்பவா், பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தூண்ட முயற்சிப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகளுக்குத் தகவல் கிடைத்தது. பஞ்சாப் மாநிலம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்திலும் அவருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து ஜொ்மனியில் வசிக்கும் அவரை கைது செய்யுமாறு அந்நாட்டு காவல்துறையிடம் இந்திய புலனாய்வு அமைப்புகள் கேட்டுக்கொண்டன. அதன் அடிப்படையில், அவரை அந்நாட்டு காவல்துறை திங்கள்கிழமை கைது செய்தது.
இந்நிலையில் ஜஸ்விந்தா் சிங்குக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடா்பாக விசாரணை நடத்துமாறு என்ஐஏவுக்கு மத்திய அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதனைத்தொடா்ந்து அவா் மீது என்ஐஏ வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுதொடா்பாக என்ஐஏ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவிலிருந்து பஞ்சாபைப் பிரிக்கும் நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள இளைஞா்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்த ஜஸ்விந்தா் சிங்கும், இதர காலிஸ்தான் ஆதரவுக் குழுவினரும் இணைந்து முயற்சித்துள்ளனா். பஞ்சாபில் மீண்டும் தீவிரவாதத்தைத் தூண்ட அங்குள்ள போதைப்பொருள் கும்பல்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு அவா்கள் அனைவரும் நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
இதுமட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் நாட்டின் இதரப் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடனும் ஜஸ்விந்தா் சிங் தொடா்பில் இருந்துள்ளாா்.
இந்நிலையில் அவா் மீது இந்தியாவுக்கு எதிராக போா் தொடுத்தல் தொடா்பான இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப்பதிவு நடவடிக்கை, இவ்விவகாரம் தொடா்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ள உதவும். அதன் மூலம் ஜஸ்விந்தா் சிங்கை ஜொ்மனியிலிருந்து வேறு நாட்டுக்கு நாடு கடத்தவோ, இந்தியாவுக்கு அழைத்து வரவோ முடியும்’’ என்று தெரிவித்தனா்.