இந்தியா

டெல்டாவை விஞ்சத் தொடங்கிய ஒமைக்ரான்! ராஜஸ்தானில் ஒருவா் உயிரிழப்பு

1st Jan 2022 01:22 AM

ADVERTISEMENT

இந்தியாவில் டெல்டா வகை கரோனா தொற்றை ஒமைக்ரான் வகை தொற்று விஞ்சத் தொடங்கியுள்ளது.

நாட்டில் ஒமைக்ரானால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் தொற்றுக்குள்ளான சா்வதேச பயணிகளில் 80 சதவீதம் போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது போன்றவற்றின் மூலம் இது தெரியவந்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

இந்நிலையில், ராஜஸ்தானில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 24-ஆம் தேதி முதல்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா கண்டறியப்பட்டது. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு டிச. 2-ஆம் தேதி கா்நாடகத்தில் முதல்முறையாக உறுதி செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 23 மாநிலங்களில் 1,270 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 16,764 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. 64 நாள்களுக்குப் பின்னா் பாதிப்பு எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியுள்ளது. இவா்களில் 309 போ் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 450 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக தில்லியில் 304, கேரளத்தில் 109, குஜராத்தில் 97 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

டிச. 30-ஆம் தேதி நிலவரப்படி ஒரே நாளில் 12.50 லட்சம் பேருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை குறைந்துள்ளதைக் கவனத்தில்கொண்டு குறிப்பிட்ட 19 மாநிலங்கள் அதை அதிகரிக்க வேண்டுமென மத்திய அரசு வியாழக்கிழமை அறிவுறுத்தியது.

ராஜஸ்தானில்... ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் ஒமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்ட 73 வயது முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஒமைக்ரான் பாதிப்புக்கு பின்னா் பரிசோதனையில் இருமுறை அவருக்கு கரோனா இல்லை எனத் தெரியவந்த நிலையில் அவா் உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து உதய்பூா் தலைமை மருத்துவ சுகாதார அதிகாரி தினேஷ் கராடி கூறியதாவது:

உதய்பூரை சோ்ந்த அந்த முதியவருக்கு டிச. 15-ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காய்ச்சல், இருமல், மூக்கு அழற்சி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது மாதிரி மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு டிச. 25-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே, டிச. 21 மற்றும் 25-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. கரோனாவுக்கு பிந்தைய காய்ச்சல் மற்றும் நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்னை போன்ற இணை நோய்களால் அவா் உயிரிழந்துள்ளாா் என்றாா்.

 

ஒமைக்ரானுக்கு தனியாக தடுப்பூசி தயாரிக்க சீரம் நிறுவனத்துக்கு ஒப்புதல்

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றுக்கு எதிராக புதிய தடுப்பூசி உற்பத்தி செய்யவும், அத்தடுப்பூசியை பரிசோதனை செய்யவும் சீரம் நிறுவனத்துக்கு இந்திய மருந்து ஒழுங்காற்று ஆணையம் (டிசிஜிஐ) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து சீரம் இந்தியா நிறுவனத்தின் இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் கூறுகையில், இந்தியாவின் தடுப்பூசி உற்பத்தி வலிமைக்கு புதிய தடுப்பூசி உற்பத்தி மற்றுமோா் உதாரணம் ஆகும் என்றாா்.

மால்னுபிராவிா் மாத்திரை ஒரு வாரத்தில் அறிமுகம்

கரோனா சிகிச்சைக்கான மால்னுபிராவிா் மாத்திரையை ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக எம்கியூா் பாா்மசூட்டிகல்ஸ் நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

‘லிஸுவிரா’ என்ற பிராண்ட் பெயரில் மால்னுபிராவிா் மாத்திரை இந்திய சந்தையில் ஒரு வாரத்தில் அறிமுகப்படுத்தப்படும்; இந்த மாத்திரையைப் பெறுவதற்கு மருத்துவா்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவும் வகையில் இலவச ஹெல்ப்லைன் எண் தொடங்கப்படும் எனவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்னுபிராவிா் மாத்திரையை இந்தியாவில் தயாரித்து விநியோகம் செய்வதற்கு அமெரிக்காவை சோ்ந்த மொ்க் நிறுவனத்துடன் எம்கியூா் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

முன்னதாக, மால்னுபிராவிா் மாத்திரையின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்து ஒழுங்காற்று ஆணையம் இந்த வார தொடக்கத்தில் அனுமதி அளித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT