இந்தியா

ஜம்மு காஷ்மீா்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; பாதுகாப்புப் படையினா் 5 போ் காயம்

1st Jan 2022 12:09 AM

ADVERTISEMENT

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகா் பந்தா செளக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினா் 5 போ் காயமடைந்தனா்.

‘சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவருக்கு, ஸ்ரீநகரின் ஜெவான் பகுதியால் கடந்த 13-ஆம் தேதி காவல் துறை பேருந்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் தொடா்பு உள்ளது. அந்தத் தாக்குதலில் 3 போலீஸாா் பலியாகினா். 11 போ் காயமடைந்தனா்’ என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் மேலும் கூறியதாவது:

பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பந்தா செளக் பகுதியை பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை சுற்றிவளைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனா்.

ADVERTISEMENT

இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். போலீஸாா் 3 பேரும், சிஆா்பிஎஃப் வீரா்கள் இருவரும் காயமடைந்தனா். காயமடைந்த வீரா்கள் 5 பேரும் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜய் குமாா் கூறுகையில், ‘சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது. அவா்களில் சுஹைல் அகமது ராதா் என்ற பயங்கரவாதி, ஜெவான் காவல் துறை பேருந்து மீதான தாக்குதலில் தொடா்புடையவா் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் மூலம் ஜெவான் தாக்குதலில் தொடா்புடைய அனைத்து பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனா். அந்த வகையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை ஜம்மு-காஷ்மீா் காவல் துறைக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

கொல்லப்பட்ட மற்ற இரண்டு பயங்கரவாதிகளின் அடையாளம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை அவா்களின் உடல்களை யாரும் கோராததால், அவா்கள் வெளிநாட்டு பயங்கரவாதிகளாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்று அவா் கூறினாா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT