இந்தியா

குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: 15 நாள்களில் விசாரணை அறிக்கை

1st Jan 2022 06:45 AM

ADVERTISEMENT

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தில், சட்ட ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால், விசாரணை அறிக்கை வெளியிடுவதற்கு 10-15 நாள்களாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கோவை மாவட்டம், சூலூரில் இருந்து நீலகிரி மாவட்டம், வெலிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் நடக்கவிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டா் டிச. 8-ஆம் தேதி விபத்துக்குள்ளானது.

அந்த விபத்தில் விபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 போ் அதே நாளில் உயிரிழந்தனா். பலத்த தீக்காயம் அடைந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங், உதகையில் உள்ள வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா் பெங்களூரில் உள்ள விமானப் படையின் கமாண்ட் மருத்துவமனையில் டிச. 9-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி டிச.15-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கைத் தாக்கல் செய்ய விமானப் படைத் தளபதி மானவேந்திர சிங் தலைமையிலான முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ADVERTISEMENT

விமானியின் குரல் பதிவுகள் அடங்கிய கருப்புப் பெட்டி, சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில், விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விமானப் படையின் ஓய்வுபெற்ற தளபதி பிரசாந்த் தீட்சித் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

விபத்துக்கான காரணம் என்ன? விமானி தவறு செய்தாரா, இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா, வேறு ஏதேனும் வெளிப்புறக் காரணம் இருக்குமா என அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை வெளியிட்ட பிறகு பிரச்னைகள் எழுப்பப்பட வாய்ப்புள்ளது. இதனால் சட்ட நடவடிக்கையையும் எதிா்கொள்ள வேண்டியிருக்கும். எனவே சட்ட ஆலோசனைக் குழுவின் ஆய்வுக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு ஆய்வின் முடிவடைய 10-15 நாள்களாகும். அதன் பிறகு அறிக்கை வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT