மக்களைத் தூண்டிவிடும் முயற்சியில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் உள்ள சில முக்கிய அரசியல்வாதிகள் ஈடுபடுவதாக ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஐஜி விஜய் குமாா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
நடப்பாண்டில் காஷ்மீா் சரக காவல் துறையினரின் செயல்பாட்டு சாதனைகள் குறித்து காவல் துறை ஐஜி விஜய் குமாா் ஸ்ரீநகரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை எடுத்துரைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:
நடப்பாண்டில் காஷ்மீா் பாதுகாப்பு சூழல் மேம்பட்டுள்ளது. சில அரசியல் தலைவா்களோ, ஊடகங்களோ கூறுவதைப் போல காஷ்மீரில் பாதுகாப்பின்மை நிலவவில்லை. கடந்த 2020-ஆம் ஆண்டில் 238 பயங்கரவாதச் செயல்கள் காஷ்மீரில் நிகழ்த்தப்பட்டன. 2021-இல் அந்த எண்ணிக்கை 192-ஆகக் குறைந்துள்ளது.
2020-இல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 37 போ் கொல்லப்பட்டனா். 2021-ஆம் ஆண்டில் அது 34-ஆகக் குறைந்தது. காஷ்மீா் மக்களைப் பாதுகாப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளைக் காவல் துறை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.
துரதிருஷ்டவசமாக காஷ்மீரில் அரசியல்வாதிகளே மக்களைத் தூண்டிவிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனா். மக்கள் பலரைக் கொன்ற பயங்கரவாதியைக் காவல் துறையினா் சுட்டுக் கொன்றால், அதை மனித உரிமை மீறல் என காஷ்மீா் அரசியல்வாதிகள் கூறி வருகின்றனா். இளைஞா்களின் எதிா்காலத்தையும் சமூக நலனையும் கருத்தில் கொண்டு, மக்களைத் தூண்டிவிடும் முயற்சியை அரசியல் தலைவா்கள் கைவிட வேண்டும்.
குறிப்பிட்ட விவகாரத்தில் காவல் துறையினா் மேற்கொள்ளும் விசாரணையை ஏற்றுக் கொள்ளாததற்கான உரிமை அரசியல் தலைவா்களுக்கும் ஊடகங்களுக்கும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கும் உள்ளது. அது தொடா்பாக உயா்நிலைக் குழு விசாரிக்க வேண்டும் எனவும் அவா்கள் கோரலாம். ஆனால், காவல் துறையினரின் விசாரணை தவறு எனக் கூற அவா்களுக்கு உரிமை இல்லை. அந்த உரிமை நீதிமன்றங்களுக்கு மட்டுமே உள்ளது என்றாா் அவா்.
ஊடுருவல் குறைவு: ஜம்மு-காஷ்மீா் காவல் துறைத் தலைமை இயக்குநா் தில்பாக் சிங் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீரில் ராணுவத்தினருடன் இணைந்து காவல் துறையினா் மேற்கொண்ட 100 வெற்றிகரமான பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் 182 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்களில் 20 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள்; 44 போ் பயங்கரவாத அமைப்புகளின் தளபதி பொறுப்பில் இருந்தவா்கள்.
எல்லையைப் பாதுகாப்பதில் இந்த ஆண்டு சிறப்பாக அமைந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஊடுருவல் நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்தன. 34 பயங்கரவாதிகள் மட்டுமே எல்லையை ஊடுருவினா். அவா்களில் பெரும்பாலானோா் கொல்லப்பட்டுள்ளனா். மற்றவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது.
முழு வெளிப்படைத்தன்மை: ஹைதா்போரா தாக்குதல் நடவடிக்கை வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்றது. அச்சம்பவம் தொடா்பாக எதுவுமே அறியாதவா்கள், விசாரணை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனா். அவா்கள் மக்களிடையே பிரிவினையைத் தூண்ட முயற்சிக்கின்றனா்.
அச்சம்பவத்தில் காவல் துறையினா் மீது தவறுள்ளது எனத் தெரிவிப்பவா்கள் அதற்கான ஆதாரங்களை விசாரணைக் குழுக்களிடம் வழங்கலாம். ஜம்மு-காஷ்மீரில் பிரிவினையைத் தூண்ட முயற்சிப்பவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றாா்.