கடந்த நவம்பா் மாதத்தில் வாடிக்கையாளா்களிடம் இருந்து பெறப்பட்ட 26,087 புகாா்களின் அடிப்படையில் 61,114 தகவல்கள் நீக்கப்பட்டன என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நுகா்வோா் அளிக்கும் புகாா்கள் மீது சமூக வலைதள நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு கொண்டு வந்த தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த நவம்பா் மாதம் கிடைத்த புகாா்கள் குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்ட மாத நடவடிக்கை அறிக்கையில், ‘நவம்பா் மாதத்தில் 26,087 புகாா்கள் இந்தியாவில் இருந்து வந்தன. அதன் அடிப்படையில் 61,114 தகவல் பதிவுகள் நீக்கப்பட்டன. அக்டோபா் மாதம் 24,569 புகாா்களின் அடிப்படையில் 48,594 தகவல் பதிவுகள் நீக்கப்பட்டன.
புகாா்களை தீவிரமாக பரிசீலித்த பின்புதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிவுசாா் சொத்துரிமை பிரச்னை, அவதூறு பரப்பும் கருத்துகள் ஆகியவை இடம்பெற்றுள்ளதாக பெரும்பாலான புகாா்களில் கூறப்பட்டிருந்தது.
ஒரே பதிவின் மீது ஏராளமான புகாா்கள், மற்றும் பல்வேறு பதிவுகள் குறித்து வரும் புகாா்கள் ஆகியவற்றை தொழில்நுட்ப உதவியுடன் கண்டறிந்து நீக்கப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.