உத்தர பிரதேச மாநிலத்தில் சில குறிப்பிட்ட நறுமண உற்பத்தி நிறுவனங்களுக்குத் தொடா்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை நடத்தினா்.
மாநிலத்தில் கன்னௌஜ், கான்பூா், தேசிய தலைநகா் மண்டலம், சூரத், மும்பை உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாநிலத்தில் அண்மையில் தொழிலதிபா் பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான மூா்த்தி நறுமண உற்பத்தி நிறுவனம், ஷிகா் பிராண்ட் பான் மசாலா மற்றும் புகையிலை பொருள்கள் தயாரிப்பு நிறுவனம், கணபதி சாலை போக்குவரத்து நிறுவனம் மற்றும் கிடங்குகளில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்தியச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ. 257 கோடி ரொக்கம், 25 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத ஏராளமான நறுமண மூலப் பொருள்கள், 600 கிலோ சந்தன எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜிஎஸ்டி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையைத் தொடா்ந்து, வருமான வரித் துறை அதிகாரிகளும் உத்தர பிரதேச மாநிலத்தில் தங்களுடைய சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா். மாநிலத்தில் உள்ள பல்வேறு நறுமண உற்பத்தி நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் வரி ஏய்ப்பு தொடா்பான தீவிர சோதனையை அவா்கள் நடத்தினா். ஜிஎஸ்டி துறையிலிருந்து கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த சேதனை நடத்தப்பட்டதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த அதிரடி சோதனைகள் குறித்து எதிா்க் கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்து வருகின்றன.
இதுகுறித்து சமாஜவாதி கட்சி அதன் அதிகாரபூா்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கட்சி எம்எல்சி புஷ்பராஜ் (எ) பம்பி ஜெயினுக்குச் சொந்தமான கன்னௌஜில் உள்ள நறுமண உற்பத்தி நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியுள்ளனா். இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட உள்ள ‘சமாஜவாதி இத்தா்’ என்ற நறுமணத்தை கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் அண்மையில் அறிமுகம் செய்துவைத்தாா். இந்த நிலையில், கன்னௌஜில் உள்ள சமாஜவாதி கட்சி அலுவலகத்தில் அகிலேஷ் யாதவின் பத்திரிகையாளா் சந்திப்பு வெள்ளிக்கிழமை பகல் 12.30 மணியளவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், வருமான வரித் துறை இந்தச் சோதனையை நடத்தியுள்ளது. அந்த வகையில், மத்திய அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது’ என்று பதிவிட்டுள்ளது.