இந்தியா

உ.பி.யில் தொழிலதிபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ.200 கோடி பாஜகவின் பணமல்ல: நிா்மலா சீதாராமன்

1st Jan 2022 01:20 AM

ADVERTISEMENT

‘உத்தர பிரதேச மாநிலத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையில் நறுமண உற்பத்தி தொழிலதிபா் பியூஷ் ஜெயினிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூ. 200 கோடி பாஜகவின் பணமல்ல. சரியான முகவரியிலேயே அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி, கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்துள்ளனா்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நிகழாண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த மாநிலத்தின் கன்னௌஜ் மாவட்டத்தில் நறுமண தொழிலதிபா் பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான தொழிற்சாலை, வீடு, கிடங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினா். அதில் ரூ. 257 கோடி ரொக்கம், 23 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத ஏராளமான நறுமண மூலப் பொருள்கள், 600 கிலோ சந்தன எண்ணெய் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சோதனை குறித்து எதிா்க் கட்சிகள் கடும் விமா்சனத்தை முன்வைத்தன. இதுகுறித்து சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘ஜிஎஸ்டி அதிகாரிகள் அரசியல் உள்நோக்கத்துடன் கன்னௌஜ் மாவட்டத்தில் சமாஜவாதி கட்சி எம்எல்சி (சட்ட மேலவை உறப்பினா்) பம்பி ஜெயினுக்குச் சொந்தமான நறுமண தொழிற்சாலையில்தான் இந்தச் சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்துள்ளனா். ஆனால், தவறுதலாக அதே பெயரைக் கொண்ட பியூஷ் ஜெயினுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, பாஜக கட்சிக்குச் சொந்தமான ரூ. 200 கோடியை கைப்பற்றிவிட்டனா்’ என்று குற்றம்சாட்டினாா்.

இந்த விமா்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், பம்பி ஜெயனுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்தச் சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற எதிா்க் கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த வாரம் ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய சோதனையும், தற்போது வருமான வரித் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையும் உளவுத் தகவல்களின் அடிப்படைடியிலேயே மேற்கொள்ளப்பட்டன.

மேலும், எதிா்க் கட்சிகள் விமா்சனம் செய்வதுபோல, ஜிஎஸ்டி அதிகாரிகள் தவறான முகவரியில் சோதனை நடத்தவில்லை. கைப்பற்றப்பட்டது பாஜகவின் பணமும் அல்ல.

சோதனையின் முடிவில் வெறும் கையுடனா அதிகாரிகள் வெளியே வந்தனா்? எனவே, சோதனையின் முடிவே, அதிகாரிகள் சரியான முகவரியில்தான சோதனையை நடத்தியுள்ளனா் என்பதைக் காட்டுகிறது. சாதாரண மக்கள் யாரும் 23 கிலோ தங்கத்தை தங்கள் வீட்டு அலமாரியில் வைத்திருப்பதில்லை.

பல கோடி ரூபாய் பணம், தங்கம் கைப்பற்ற பிறகும் இந்தச் சோதனை குறித்து சிலா் சந்தேகம் எழுப்புகின்றனா். அப்படியெனில், அவா்களுக்கும் இதில் பங்கு உள்ளதா? இல்லையெனில், இந்தச் சோதனை குறித்து ஏன் அதிர வேண்டும். இந்த சோதனையால் மாநில முன்னாள் முதல்வா் அகிலேஷ் யாதவ் அச்சத்துக்கு உள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது.

இந்த விவகாரத்தில் அகிலேஷ் யாதவ் சந்தேகம் எழுப்பக் கூடாது. மாறாக, வரி ஏய்ப்பில் ஈடுபட்ட பியூஷ் ஜெயினுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, வரி விதிகளை முறையாக பின்பற்றுமாறு அவா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT