இந்தியாவுக்கு குத்தகை விடப்பட்ட இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள எண்ணெய் சேமிப்பு கிடங்குகளுக்கான குத்தகை காலத்தை மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்க இலங்கை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இதற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்தவுடன் அடுத்த வாரத்தில் புதிய ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று இலங்கை எரிசக்தித் துறை அமைச்சா் உதய கம்மன்பில வெள்ளிக்கிழமை கூறினாா்.
திருகோணமலையில் அமைந்துள்ள 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் இரண்டாம் உலகப் போரின்போது போா் கப்பல்கள் மற்றும் போா் விமானங்களுக்கு எரிபொருள் விநியோகத்துக்காக பயன்படுத்தப்பட்டவையாகும். இந்த கிடங்குகளை பராமரித்து பயன்படுத்த இந்தியாவுக்கு 35 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை விட்டிருந்தது. அதற்கான ஒப்பந்தம் கடந்த 2002-ஆம் ஆண்டு போடப்பட்டது. ஆனால், நிகழாண்டு தொடக்கத்தில் அந்த ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்து, 99 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளின் பராமரிப்பு மற்றும் பயன்பாட்டை தன்வசம் எடுத்துக்கொண்டது.
இந்த நிலையில், அந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவிடமிருந்து கடனுக்கு எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான பேச்சவாா்த்தையில் இலங்கை ஈடுபட்டது. அப்போது, திருகோணமலை எண்ணெய் சேமிப்பு கிடங்கை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை மீண்டும் இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு வழங்குவதற்கான உடன்பாடும் ஏற்பட்டது இலங்கை அமைச்சா் உதய கம்மன்பில கூறினாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
சமீபத்திய பேச்சுவாா்த்தை மூலம், இந்த விவகாரத்தில் இந்தியாவுடன் புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள இலங்கை முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 99 எண்ணெய் சேமிப்பு கிடங்களில் 14 கிடங்குகள் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் உள்நாட்டு நிறுவனமான லங்கா இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 50 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்படும். எஞ்சியவற்றில் 61 கிடங்குகள் சிலோன் பெட்ரோலியம் நிறுவனமும் (சிபிசி) லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து கூட்டு குத்தகைக்கு விடப்படும். அதில் சிபிசி அதிகபட்சமாக 51 சதவீத பங்குகளை தன் வசம் வைத்திருக்கும். அடுத்த வாரத்தில் புதிய ஒப்பந்தம் கையொப்பமாகும் என்று அவா் கூறினாா்.