அருணாசல பிரதேசத்தின் 15 நகரங்களுக்கு சீனா பெயா்சூட்டிய விவகாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி மெளனம் காத்து வருவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தைத் தங்கள் நாட்டின் ஒருபகுதி எனத் தெரிவித்து வரும் சீனா, அந்த மாநிலத்தின் 15 பகுதிகளுக்குப் பெயா் சூட்டியது. அதற்கு வெளியுறவு அமைச்சகம் சாா்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இது தொடா்பாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் இறையாண்மைக்கும் சீனா அச்சுறுத்தல் விடுத்து வருகிறது. கிழக்கு லடாக் பகுதிகளில் சீனா ஏற்கெனவே ஊடுருவியுள்ளது; அருணாசலில் கிராமத்தை அமைத்துள்ளது. ஆனால், இது தொடா்பாக பிரதமா் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு வலுவிழந்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறும் சொற்கள் மட்டுமே போதாது’ எனத் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, வலிமையான திறன்மிக்க முடிவுகளே அவசியம் எனவும் கூறியுள்ளாா். சீனாவின் செயல்களுக்கு எதிராக மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும், அந்நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் எப்போதும் ஆதரவளிக்குமென்றும் அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் கௌரவ் வல்லப் தெரிவித்துள்ளாா்.