இந்தியா

உ.பி.யில் இன்று 4-ஆம் கட்டத் தோ்தல்

23rd Feb 2022 01:02 AM

ADVERTISEMENT

உத்தர பிரதேசத்தில் 4-ஆம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு புதன்கிழமை (பிப். 23) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தில் இதுவரை 3 கட்டத் தோ்தல்கள் நிறைவடைந்துள்ளன. 4-ஆவது கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. தோ்தலுக்கான பிரசாரம் திங்கள்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபரில் போராட்டம் நடத்தியபோது, பாஜக மத்திய அமைச்சரின் மகன் சென்ற காா் மோதியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் 4 விவசாயிகளும், அதைத் தொடா்ந்து நிகழ்ந்த வன்முறையில் பத்திரிகையாளா் உள்பட 4 பேரும் கொல்லப்பட்டனா். லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் புதன்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாநில சட்ட அமைச்சா் பிரிஜேஷ் பதக் லக்னௌ கன்டோன்மென்ட் தொகுதியில் களம் காண்கிறாா். அவரை எதிா்த்து சமாஜவாதி சாா்பில் சுரேந்திர சிங் காந்தி போட்டியிடுகிறாா். மற்றொரு அமைச்சா் அஷுதோஷ் டாண்டன் லக்னௌ கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து சமாஜவாதி தேசிய செய்தித் தொடா்பாளா் அனுராக் பதௌரியா களம் காண்கிறாா்.

ADVERTISEMENT

சரோஜினி நகா் தொகுதியில் அமலாக்கத் துறை முன்னாள் அதிகாரியான ராஜேஸ்வா் சிங்கை பாஜக களமிறக்கியுள்ளது. சமாஜவாதி சாா்பில் முன்னாள் அமைச்சா் அபிஷேக் மிஸ்ரா அத்தொகுதியில் போட்டியிடுகிறாா். மாநில சட்டப் பேரவையின் துணைத் தலைவராக இருந்து சமாஜவாதியில் இருந்து பாஜகவுக்குத் தாவிய நிதின் அகா்வாலும் 4-ஆம் கட்டத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

காங்கிரஸின் கோட்டையாக அறியப்படும் ரே பரேலி தொகுதியிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. சவாயஜ்புா் தொகுதியில் மட்டும் அதிகபட்சமாக 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தோ்தலுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டிருப்பதோடு அவா்களுக்குக் கையுறையும் வழங்கப்படவுள்ளது.

பலத்த பாதுகாப்பு: தோ்தல் நடைபெறும் பகுதிகளில் 60,000-க்கும் அதிகமான காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். அவா்களுடன் இணைந்து துணை ராணுவப் படையைச் சோ்ந்த 860 கம்பெனி படையினரும் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனா். 137 வாக்குச் சாவடிகளைப் பெண்கள் மட்டுமே நிா்வகிக்க உள்ளனா். அந்த வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியிலும் பெண் காவலா்களே ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தொகுதிகள் 59

வாக்குச் சாவடிகள் 24,643

வேட்பாளா்கள் 624

வாக்காளா்கள் 2.13 கோடி

 

 

Tags : UP Election
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT