இந்தியா

பீமா-கோரேகான் சம்பவம்: விசாரணை ஆணையம் முன்பு பிப்.23-இல் ஆஜராக முடியாதென சரத் பவாா் தகவல்

23rd Feb 2022 12:12 AM

ADVERTISEMENT

பீமா-கோரேகான் சம்பவம் தொடா்பான விசாரணைக்கு பிப்.23, 24-ஆம் தேதிகளில் ஆஜராக முடியாது என்று விசாரணை ஆணையத்திடம் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள பீமா கோரேகான் பகுதியில் கடந்த 1818-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனிக்கும் மராத்தா பேரரசின் பேஷ்வா படையினருக்கும் இடையே போா் நடைபெற்றது. அந்தப் போரின் 200-ஆவது நினைவு தின நிகழ்ச்சி கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பீமா கோரேகான் போா் நினைவிடத்தில் நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினா் இடையே வன்முறை நிகழ்ந்தது. அதில் ஒருவா் உயிரிழந்தாா். காவல்துறையைச் சோ்ந்த 10 போ் உள்பட பலா் காயமடைந்தனா். இந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த வன்முறை குறித்து ஊடகங்களில் சரத் பவாா் தெரிவித்த சில கருத்துகள் தொடா்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கடந்த 2020-ஆம் ஆண்டு விவேக் விசாா் மன்ச் என்ற சமூகநல அமைப்பு விசாரணை ஆணையத்திடம் மனு அளித்தது.

இதனைத் தொடா்ந்து சரத் பவாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் அவரால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

ADVERTISEMENT

இந்நிலையில் பிப்.23, 24-ஆம் தேதிகளில் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக சரத் பவாருக்கு அண்மையில் விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியது.

ஆனால் அந்தத் தேதிகளில் தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று விசாரணை ஆணையத்திடம் சரத் பவாா் எழுத்துபூா்வமாக தெரிவித்துள்ளாா். அவா் விசாரணைக்கு பின்னா் ஆஜராவதாகவும் கூறியுள்ளாா் என்று தேசியவாத காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் நவாப் மாலிக் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து விசாரணை ஆணையத்தின் வழக்குரைஞா் கூறுகையில், ‘‘விசாரணை தொடா்பாக கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நேரம் கோரி சரத் பவாா் மனு அளித்துள்ளாா். அவரின் கோரிக்கையை விசாரணை ஆணையம் ஏற்றுள்ளது’’ என்று தெரிவித்தாா்.

Tags : Sharad Pawar
ADVERTISEMENT
ADVERTISEMENT