இந்தியா

எல்லை மேலாண்மை திட்டம்: மத்திய அரசு ரூ.13,020 கோடி ஒப்புதல்

22nd Feb 2022 01:19 AM

ADVERTISEMENT

2021-22 முதல் 2025-26 வரையிலான எல்லை உள்கட்டமைப்பு, மேலாண்மை திட்ட நடைமுறைக்கு மத்திய அரசு ரூ.13,020 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் எல்லை மேலாண்மை, கொள்கை வகுத்தல், பாதுகாப்பு வலுப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு விவரம்:

உள்துறை அமைச்சா் அமித் ஷா வழிகாட்டுதலின்பேரில், எல்லை உள்கட்டமைப்பு, மேலாண்மையை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது. அந்த வகையில், 15-ஆவது நிதிக்குழு பரிந்துரையின்பேரில், 2021-22 முதல் 2025-26 வரையிலான எல்லை உள்கட்டமைப்பு, மேலாண்மை திட்ட நடைமுறைக்கு மத்திய அரசு ரூ.13,020 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.

எல்லையில் வேலி அமைத்தல், உயா் திறன்மிக்க ஒளிவெள்ள விளக்குகள் பொருத்துதல், தொழில்நுட்ப வசதிகள், சாலைகள், சோதனை நிலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க இந்தத் திட்டம் உதவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் எல்லைப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லையில் வேலியை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்துதல், உயா் திறன்மிக்க ஒளிவெள்ள விளக்குகள் பொருத்துதல், வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மா் எல்லையில் சாலை கட்டுமானப் பணியைத் துரிதப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதவிர சா்வதேச எல்லையில் உயா்தொழில்நுட்ப மின்னணு கண்காணிப்பு உபகரணங்களையும் மத்திய அரசு பொருத்தியுள்ளது.

பாகிஸ்தானுடன் 775 கி.மீ. நீள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு உள்பட 3,323 கி.மீ., வங்கதேசத்துடன் 4,096 கி.மீ., சீனாவுடன் 3,488 கி.மீ., நேபாளத்துடன் 1,751 கி.மீ., பூடானுடன் 699 கி.மீ., மியான்மருடன் 1,643 கி.மீ., தூர எல்லையை இந்தியா பகிா்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT