இந்தியா

பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக் கூடாதா?: ஐபிஎஸ் மணமகனின் திருமண ஊர்வலம்

20th Feb 2022 09:42 AM

ADVERTISEMENT

 

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் திருமண ஊர்வலத்தில் குதிரையில் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், காவல் துறையின் பாதுகாப்புடன் திருமண ஊர்வலம் நடைபெற்றது.

ராஜஸ்தானில் ஆதிக்க சாதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களின் திருமண ஊர்வலத்தின்போது பிரச்னையில் ஈடுபடுவதால், காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்திலுள்ள சுராஜ்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில் குமார் தன்வன்டா, பட்டியலினத்தைச் சேர்ந்த 26 வயதான இவர், தனது கடின உழைப்பின் மூலம் கிராமத்தின் முதல் ஐபிஎஸ் அதிகாரியாகியுள்ளார். 

ADVERTISEMENT

இந்நிலையில், அவரது திருமணத்தையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை பலத்த காவல் துறையின் பாதுகாப்புடன் மணமகன் அழைப்பு  நடைபெற்றது.

ஏனெனில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் குதிரையில் செல்லக்கூடாது என்று அப்பகுதியிலுள்ள ஆதிக்க சமூகத்தினர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

சாதி பாகுபாட்டிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் சுனில் குமார், தனது திருமண ஊர்வலத்தை குதிரையில் நடத்த திட்டமிட்டார். இதற்காக காவல் துறையில் உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் பாதுகாப்புடன் மணமகன் ஊர்வலம் நடைபெற்றது.

இது தொடர்பாக பேசிய மணமகன் சுனில் குமார், எனது அத்தைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அப்போது எனது மாமாவை ஆதிக்க சமூகத்தினர் திருமண ஊர்வலத்தின்போது அடித்து உதைத்தனர். அவரது ஊர்வலம் குதிரையில் கூட நடைபெறவில்லை. அதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வசிக்கும் பகுதியைத் தாண்டி மணமகன் ஊர்வலம் நடைபெற்றாலும் அவர்கள் பிரச்னையில் ஈடுபடுவர். எங்கள் கிராமத்தில் இது தொடர்ந்து நடைபெற்று வருவதால், எனது திருமணத்தை குதிரையில் நடத்த விரும்பினேன்.

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தாலும் நான் இவ்வாறு செய்வதை எனது பெற்றோர் இதனை விரும்பவில்லை. அதனால் காவல் துறையின் பாதுகாப்பு கோரினேன். தற்போது நிலைமை மாறிவருகிறது. ஆனால் இது முழுமையாக மாற நீண்ட காலம் தேவைப்படும் என்று கூறினார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT