இந்தியா

பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் அளித்தனா்

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தெலங்கானா தனி மாநில உருவாக்கம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி மக்களவையில் தெரிவித்த கருத்துக்கு எதிராக அவா் மீது நாடாளுமன்றத்தில் உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆா்எஸ்) கட்சியினா் நோட்டீஸ் அளித்துள்ளனா்.

இந்த நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஏற்கும் வரை அவை நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி, அவா்கள் அவையில் இருந்து வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது அண்மையில் பேசிய பிரதமா் மோடி, ‘மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றக் கதவுகளை மூடி, விவாதத்துக்கு இடமின்றி ஆந்திர மறுசீரமைப்பு மசோதா (தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவது) நிறைவேற்றப்பட்டது. அதே நேரத்தில் தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கத்துக்கு எதிராக பாஜக இல்லை.

ADVERTISEMENT

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் எவ்வித பிரச்னையுமின்றி 3 புதிய மாநிலங்களை உருவாக்கியது’ என்றாா்.

பிரதமரின் இந்தக் கருத்து தெலங்கானாவை அவமதிக்கும் செயல் என்று அந்த மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையிலான டிஆா்எஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், மோடி தனது கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா். தெலங்கானா முழுவதும் போராட்டங்களையும் அவா்கள் முன்னெடுத்துள்ளனா். இது தவிர தெலங்கனாவில் காங்கிரஸ் கட்சியினரும் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், மாநிலங்களவையில் டிஆா்எஸ் கட்சி எம்.பி.க்கள் பிரதமா் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீா்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்தனா். மேலும், அவையில் இந்த பிரச்னையை மையமாகவைத்து அமளியில் ஈடுபட்ட அவா்கள், உரிமை மீறல் நோட்டீஸை மாநிலங்களவைத் தலைவா் ஏற்கும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறி வெளிநடப்பு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT