இந்தியா

கரோனா எதிரொலி: பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடு 7.8%-ஆக குறைப்பு

11th Feb 2022 03:36 AM

ADVERTISEMENT


மும்பை: கரோனா இடர்ப்பாடுகளின் காரணமாக வரும் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.8 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை தெரிவித்தது.

பணவியல் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ஆறு உறுப்பினர்களைக் கொண்ட பணவியல் கொள்கை குழுவில் வங்கிக் கடனுக்கான வட்டி விகிதங்களில் பழைய நிலையே தொடர ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகவே தொடரும். அதேபோன்று, இதர வணிக வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவீதமாகவே நீடிக்கும்.

பொருளாதார வளர்ச்சி: கரோனா பேரிடர், பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. மேலும், சர்வதேச அளவில் பொருள்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதுபோன்ற சாதகமற்ற அம்சங்களை கருத்தில் கொள்ளும்போது, நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் எதிர்பார்க்கப்பட்ட 9.2 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவான விகிதமாகும்.

ADVERTISEMENT

பணவீக்கம்: நடப்பு நிதியாண்டில் நாட்டின் சில்லறைப் பணவீக்கமானது 5.3 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ள 2022-23-ஆம் நிதியாண்டில் இது 4.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. சாதகமான பருவநிலை, புதிய பயிர்களின் வரத்து ஆகியவை பணவீக்கம் குறைவதற்கு முக்கிய காரணிகளாக விளங்கும்.
எண்ம பற்றுச்சீட்டு: ஈ-ரூபி எனப்படும் எண்ம (டிஜிட்டல்) பற்றுச்சீட்டுக்கான (வவுச்சர்) உச்சவரம்பு தற்போதைய ரூ.10,000-இலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கப்படுவதுடன், பன்முறை பயன்பாட்டுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி அச்சுறுத்தல்: நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு தனியார்களின் கிரிப்டோகரன்சி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த இரண்டு முனைகளில் இருந்து வரும் சவால்களை எதிர்கொள்வதற்கான திறனை கிரிப்டோகரன்சி குறைப்பதாக உள்ளது.

எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத நீர்க்குமிழியாக இருக்கும் கிரிப்டோகரன்சி போன்ற சொத்து முதலீடுகளில் முதலீட்டாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றார் அவர்.

ரிசர்வ் வங்கியின் அடுத்த பணவியல் கொள்கைக் குழுக் கூட்டம் ஏப்ரல் 6 முதல் 8-ஆம் தேதி வரையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT