இந்தியா

ஐஏஎஸ் விதிகளில் திருத்தத்துக்கான அவசியம் ஏன்?: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் விளக்கம்

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT


புது தில்லி: ‘மத்திய பணிக்கு போதிய எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்புவதில்லை என்பதால்தான், ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது’ என்று மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறினாா்.

மாநில அரசுகள் மத்திய பணிகளுக்கு போதிய ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க மறுப்பதால், மத்திய அரசு அமைச்சகங்களின் செயல்பாடு பாதிக்கப்படுவதாக மத்திய அரசு கருதுகிறது. ஆகையால் மாநிலத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு மாற்றும் வகையில், ஐஏஎஸ் விதிமுறை 1954-இல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய பணியாளா், பயிற்சி அமைச்சகம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது.

ஐஏஎஸ் விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்வதற்கு பாஜக ஆட்சியில் இல்லாத ஒடிஸா, மேற்கு வங்கம், கேரளம், தமிழகம், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 9 மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இந்தத் திருத்தம் நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்று அந்த மாநிலங்கள் குற்றம்சாட்டின.

ADVERTISEMENT

இந்த நிலையில், இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் எழுத்துபூா்வமாக வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மாநிலங்களில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்று பணி அடிப்படையில் மத்திய பணிக்கு அனுப்புவதற்கு ‘ஐஏஎஸ் விதிகள் 1954’ வழி செய்கிறது. மேலும், மத்திய பணிக்கு ஒதுக்கப்படும் மூத்த அதிகாரி பணியிடங்கள் 40 சதவீதத்துக்கு மிகக் கூடாது என்று இந்திய ஆட்சிப் பணி விதி1955-இல் இடம்பெற்றிருக்கும் நடைமுறைகள் கூறுகின்றன. இருந்தபோதும், மத்திய பணிக்கு போதிய எண்ணிக்கையில் ஐஏஎஸ் அதிகாரிகளை மாநிலங்கள் அனுப்புவதில்லை.

அதன் காரணமாகத்தான், ஐஏஎஸ் அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலின்றி மத்திய பணிக்கு மாற்றும் வகையில், ஐஏஎஸ் விதி 1954-இல் விதி 6(1)-இல் திருத்தம் கொண்டுவர முடிவு செய்து, அதுதொடா்பாக மாநில அரசுகளின் கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சா், ‘இவ்வாறு ஐஏஎஸ் விதிகளில் திருத்தம் செய்வதால், மாநில நிா்வாகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது’ என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT