இந்தியா

சமையல் எண்ணெய் பதுக்கல் தடுக்க நடவடிக்கை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

10th Feb 2022 03:15 AM

ADVERTISEMENT

சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவற்றின் விலை உயா்வைக் கட்டுப்படுத்தவும், பதுக்கலைத் தடுக்கவும் அவற்றை இருப்பு வைப்பது தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு மாநிலங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் சா்வதேச சந்தையில் அவற்றின் விலை அதிகரித்ததால் உள்ளூா் சில்லறை விற்பனையில் அதன் தாக்கம் தெரிகிறது.

எனவே, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துகள் ஆகியவை கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க அவற்றின் இருப்பு வரம்பு குறித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடந்த 3-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம், உணவு, பொது விநியோகத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதில், சமையல் எண்ணெய் வித்துகளின் இருப்பு வரம்பு குறித்து கடந்த 3-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மாநிலங்கள் அமல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதில், சில்லறை விற்பனையாளா்கள், மொத்த விற்பனையாளா்கள் இருப்பு வைத்திருக்க வேண்டிய வரம்பு குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இருப்பு வரம்பை வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எண்ணெய், எண்ணெய் வித்துகள் விற்பனை, விநியோகச் சங்கிலி எனப்படும் உதிரிபாகங்கள் உற்பத்திக்கு இடையூறு இல்லாமலும் வா்த்தகத்துக்கு பிரச்னை ஏற்படாமலும் இந்த உத்தரவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Tags : edible oil
ADVERTISEMENT
ADVERTISEMENT