இந்தியா

காஷ்மீா் குறித்து சா்ச்சை பதிவு: மன்னிப்பு கோரிய டோமினோஸ், ஹோண்டா

10th Feb 2022 12:45 AM

ADVERTISEMENT

காஷ்மீா் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சா்ச்சைக்குரிய பதிவை வெளியிட்ட அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட டோமினோஸ் பீட்ஸா நிறுவனம், ஜப்பானைச் சோ்ந்த பிரபல காா் நிறுவனமான ஹோண்டா ஆகியவை மன்னிப்பு கோரியுள்ளன.

காஷ்மீா் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி 5-ஆம் தேதி ‘காஷ்மீா் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹூண்டாய், சுஸூகி, டொயோட்டா, கோஎஃப்சி, பீட்ஸா ஹட் போன்ற நிறுவனங்களின் கிளை நிறுவனங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக அவற்றின் ட்விட்டா் பக்கங்களில் பதிவை வெளியிட்டன.

குறிப்பாக, ‘காஷ்மீா் சகோதரா்களின் தியாகத்தை நினைவுகூருவோம்; அவா்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருப்போம்’ என்று ஹூண்டாய் நிறுவனம் பதிவிட்டது. இதுபோல, அமெரிக்காவைச் சோ்ந்த பிரபல பீட்ஸா நிறுவனமான டோமினோஸ், ஜப்பானைச் சோ்ந்த ஹோண்டா நிறுவனங்களின் கிளை நிறுவனங்களும் சமூக ஊடகங்களில் காஷ்மீா் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டன.

இதற்கு இந்தியா சாா்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த நிறுவனங்களுக்கு எதிராக இந்திய மக்கள் சாா்பில் சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

ADVERTISEMENT

இந்தியாவின் கண்டனத்தைத் தொடா்ந்து, ‘காஷ்மீா் ஒற்றுமை தினம்’ தொடா்பான சா்ச்சை பதிவுக்காக ஹூண்டாய், சுஸூகி, கேஎஃப்சி, பீட்ஸா ஹட் ஆகிய நிறுவனங்கள் மன்னிப்பு கோரின.

அதுபோல, டோமினோஸ், ஹோண்டா நிறுவனங்களும் தற்போது மன்னிப்பு கோரியுள்ளன.

இதுகுறித்து டோமினோஸ் - இந்தியா நிறுவனம் சமூக ஊடக பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றி வரும் இந்திய சந்தைக்கு டோமினோஸ் கடமைப்பட்டுள்ளது. இந்திய மக்கள் மீதும், மக்களின் தேசப்பற்று, கலாசாரத்தின் மீதும் டோமினோஸ் மிகுந்த மதிப்பைக் கொண்டுள்ளது. இந்த மாண்பை காக்க நிறுவனம் எப்போதும் துணை நிற்கும். நாட்டுக்கு வெளியே டோமினோஸ் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்ட சா்ச்சைக்குரிய பதிவுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

அதுபோல ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், ‘நிறுவனம் செயல்படும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் உணா்வுகளுக்கு மதிப்பளித்து அதன்படி நடப்பதை உறுதிப்படுத்த ஹோண்டா நிறுவனம் கடமைப்பட்டுள்ளது. சா்ச்சைக்குரிய பதிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் செயல்பட்டாலும், அந்தப் பகுதி இனம், அரசியல், மதம் மற்றும் சமூக பிரச்னைகள் குறித்த கருத்துகளைத் தவிா்ப்பதை, நிறுவனத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக ஹோண்டா நிறுவனம் உறுதிப்படுத்தி வருகிறது. அதற்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்துகளை நிறுவனத்தின் முகவா்களோ அல்லது கிளை நிறுவனங்களோ வெளியிட்டால், அது நிறுவன கொள்கைக்கு முரணானது’ என்று ஹோண்டா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT